ஏன் ஜி தமிழ்நாடுனா அலர் “ஜி” : மோடி மீது விஜய் தாக்கு!

Published On:

| By Kavi

Vijay attack dmk stalin bjp modi

தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் இன்று (மார்ச் 28)நடைபெற்றது. Vijay attack dmk stalin bjp modi

பொதுக்குழுவில் கடைசியாக பேசிய கட்சித் தலைவர் விஜய், பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார்.

கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது என்று தனது பேச்சை தொடங்கிய விஜய், ” இன்று தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியம் இருக்கிறது. இதை நீங்கள் எல்லோரும் புரிந்து வைத்திருப்பீர்கள்.

அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? அல்லது ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டைச் சுரண்டி நல்லா வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் அரசியல். அதுதான் தவெக-வின் அரசியல்.

காட்சிக்கு திராவிடம் ஆட்சிக்கு திராவிட மாடல் என்று சொல்லி தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்களாட்சியை மன்னராட்சி போல் நடத்துகிறார்கள். இவர்கள் நமக்கு எதிராக செய்கிற செயல்கள் எல்லாம் ஒன்றா? இரண்டா?

தவெக மாநாட்டில் ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து, நான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் சென்றது, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என அனைத்துக்கும் எதிராக செயல்பட்டனர்.

இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவின் போது, சிட்டிக்குள் எந்த ஹாலும் திருமண மண்டபமும் கிடைத்து விடக்கூடாது என்று செயல்பட்டனர். அதனால் மகாபலிபுரம் சென்று நடத்தினோம்.

இன்றைய தினம் பொதுக்குழு வரை எப்படி எல்லாம் தடை போடுகிறார்கள். இதெல்லாம் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும்.

ஒன்றியத்தில் நடப்பது பாசிச ஆட்சி என்று சொல்கிறீர்களே நீங்கள் செய்வது மட்டும் என்னவாம்?. அதற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சியை தானே செய்கிறீர்கள்.

ஜனநாயக முறைப்படி என் கட்சித் தோழர்களையும் மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்? தடையை மீறி என் மக்களை பார்க்க முடிவு செய்து விட்டேன் என்றால் போயே தீருவேன்.

சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் கனவு காண்கிறான் என்று சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று சொல்கிறீர்கள்.

பிறகு ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தமிழக வெற்றி கழகத்துக்கு மட்டும் கொடுக்கிறீர்கள். அணையைப் போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம் ஆனால் காற்றை தடுக்க முடியாது.

அதையும் மீறி தடுக்க வேண்டும் என்று நினைத்தால் சாதாரணமாக இருக்கிற காற்று சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாக கூட மாறும்.

மாநாட்டில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். இந்த மண் பிளவுவாதத்திற்கு எதிரான மண். சகோதரத்துவ மண், சமூக நீதிக்கான மண். இதையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டும்.

இங்கு சட்டம் ஒழுங்கு என ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இதற்கு இந்த கரப்ஷன் கபடதாரிகள் கவர்மெண்ட் தான் காரணம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் உண்மையான மக்களாட்சி மலர வேண்டும்.

அதற்கு இவர்களை மாற்ற வேண்டும். இதற்கு, நம்முடைய தோழர்கள் தினமும் மக்களிடம் சென்று அவர்களுடன் பேசுங்கள். அவர்களின் பிரச்சினை என்னவென்று கேளுங்கள் அப்போதுதான் நம்மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். அப்படி ஒரு ஆழமான நம்பிக்கையை விதைத்து விட்டு அதன் பின் நிமிர்ந்து பாருங்கள், ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் இரட்டை யானை, வாகை பூ கொண்ட தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே, உங்கள் ஆட்சியைப் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால்… பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு எல்லாம் சரியாக இருந்திருக்கும்.

குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வரை நடக்கும் கொடுமைகளை சொல்ல முடியவில்லை. இதில், உங்களை அப்பா என்று

வேற அழைக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கிற என்னுடைய சகோதரிகள் தான் உங்களுடைய அரசியலுக்கு, ஆட்சிக்கு முடிவு கட்டப் போகிறார்கள்.

பெண்கள் வாழ்க்கை மட்டும் போராட்டமாக இல்லை… பரந்தூர் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், போதைப் பொருள் எதிர்ப்பு போராட்டம், வரி உயர்வு போராட்டம், மீனவர்கள் போராட்டம், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம், சாம்சங் ஊழியர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், இஸ்லாமியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என எத்தனையோ போராட்டம் நடக்கின்றன.

இங்கு நீங்கள் தான் இப்படி என்றால் உங்கள் சீக்ரெட் ஓனர், உங்களுக்கும் மேல். மாண்புமிகு மோடிஜி அவர்களே, என்னவோ உங்கள் பெயரை எல்லாம் சொல்வதற்கு எங்களுக்கு பெரிய பயம் என்பது போல் சொல்லி விடுவது.

மத்தியில் ஆள்கிறவர்கள் என்று சொல்கிறோம். ஆனால் பேரை சொல்ல வேண்டும். பேரை சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் ஒரு படத்தில் லியோ லியோ என்று சொல்வது போல.

மத்தியில் ஆள்பவர்கள் என்று சொன்னால் என்ன காங்கிரஸா ஆள்கிறது. மாநிலத்தில் அதிமுகவா ஆள்கிறது. பெயரை சொல்ல வேண்டுமாம்…

ஓட்டுக்காக காங்கிரஸ் கூட தேர்தல் கூட்டணி. கொள்ளையடிப்பதற்காக பாஜகவுடன் மறைமுக கூட்டணி. இப்படி உங்கள் பெயரை சொல்லியே மக்களை ஏமாற்றுவதும் பயமுறுத்துவதும், இந்த கரப்ஷன் கபடதாரிகளுக்கு மறைமுகமாக உதவும் உங்கள் அரசுக்கு ஏன் ஜி தமிழ்நாடுனா அலர்ஜி.

தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில்லை. படிக்கும் பிள்ளைகளுக்காக நிதி கொடுப்பதில்லை. ஆனால் மும்மொழி கொள்கையை திணிக்கிறீர்கள்.

டிலிமிடேஷன் என்ற பெயரில் தமிழ்நாட்டின் பார்லிமென்ட் சீட்டுகளிலும் கை வைக்க பார்க்கிறீர்கள்.ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நீங்கள் ஆரம்பித்தபோது உங்கள் பிளான் என்னவென்று புரிந்து விட்டது பிரதமர் சார்…

உங்களிடம் ஒன்று சொல்கிறேன், தமிழ்நாட்டை கொஞ்சம் கேர்ஃபுல்லாக ஹாண்டில் பண்ணுங்க சார். ஏனென்றால் தமிழ்நாடு பல பேருக்கு தண்ணி காட்டிய ஸ்டேட் சார். பார்த்து பண்ணுங்க சார். மறந்துடாதீங்க சார்.

இதுவரை சந்திக்காத ஒரு தேர்தலை தமிழ்நாடு அடுத்த வருடம் சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே.   ஒன்று தவெக  இன்னொன்று திமுக நம்பிக்கையா இருங்க வெற்றி நிச்சயம்” என்று திமுகவையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share