நீட் தேர்வு விவகாரத்தில் இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்கள் என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில் நேற்று (ஜனவரி 10) முதல்வர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே. இதுவரை விலக்கு பெறாதது ஏன்?’ என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், “நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை” என்று கூறினார்.
இதனை குறிப்பிட்டு இன்று (ஜனவரி 11) தனது எக்ஸ் பக்கம் மூலம் கேள்வி எழுப்பியுள்ள தவெக தலைவர் விஜய், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மலைக் கள்ளன் படத்தில் பானுமதியை குதிரையில் ஏற்றியபடியே எம்.ஜி.ஆர். பாடி வரும் பாடல்தான், ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…’ என்ற பாடல். இந்த பாடலை விஜய் நீட் தேர்வு விவகாரத்தை ஒட்டி பயன்படுத்தியுள்ளார்.
ஆனால் பொருத்தம் என்னவெனில், இந்த பாடலின் சரணத்தில் எம்.ஜி.ஆர். பாடும் வரிகள் என்ன தெரியுமா?,
“தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்’கல்வி தெரியாத பேர்கள் இல்லாமல் செய்வோம்… கருத்தாக பல தொழில் பயிலுவோம்” என்று மருத்துவத் தொழில் கல்வி உள்ளிட்ட கல்வியைதான் இந்த பாடலில் அன்றே பாடி வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். என்ன பொருத்தமான பாடலை எடுத்து பயன்படுத்தியிருக்கிறார் பாருங்க விஜய் என்கிறார்கள் தவெகவினர். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
கோவம் வரல… சிரிப்புதான் வந்தது… : பேரவையில் அதிமுகவினரை கிண்டலடித்த ஸ்டாலின்