தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் விஜய் இன்று (ஜனவரி 24) ஆலோசனை நடத்தினார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய நேர்காணலும் நடைபெற்றது.
234 சட்டமன்ற தொகுதிகளில் இரு தொகுதிகளுக்கு ஒரு அமைப்பு மாவட்டங்கள் வீதம் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்டத்துக்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு இணைச் செயலாளர், இரு துணை செயலாளர்கள், ஒரு பொருளாளர், 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 19 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், கோவை மாநகர மாவட்ட செயலாளராக சம்பத்குமார், அரியலூர் மாவட்ட செயலாளராக சிவக்குமார், கரூர் மாவட்ட செயலாளராக மதியழகன், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளராக பாலாஜி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக பரணி பாலாஜி, சேலம் மத்திய மாவட்ட செயலாளராக சேலம் மோகன்ராஜ், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக சதீஷ்குமார், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பகல் சுமார் 12.30 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் மாலை 4.15 மணியளவில் முடிந்திருக்கிறது.
மாவட்ட நிர்வாகிகளிடம் விஜய் தனி தனியாக ஆலோசனையும் செய்திருக்கிறார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயத்தையும் விஜய் பரிசாக வழங்கினார்.

அதில், விஜய்யின் உருவம், தமிழக வெற்றிக் கழக பெயரும், கொடியில் இடம்பெற்றிருந்த யானை, வாகைப்பூ சின்னமும் இடம்பெற்றுள்ளது.
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ள விஜய், இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு தவெகவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.