விமர்சனம்: ரத்தம்!

Published On:

| By Kavi

கறையின் பின்னிருக்கும் உண்மை!

சில அம்சங்கள் சில படங்களில் மிக லேசாகச் சொல்லப்பட்டிருக்கும். அதில் சிலவற்றைக் கைக்கொண்டு பூதாகரப்படுத்தி திரைக்கதை அமைத்தால், இன்னொரு திரைப்படத்தை உருவாக்க முடியும். அறுபது எழுபதுகளில் வழக்கத்தில் இருந்த இந்த உத்தி, இன்றும் தமிழ் சினிமாவில் அரிதாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், ‘தனி ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு குற்றச்செய்தியின் பின்னணியிலும் வேறொரு காரணம் ஒளிந்திருக்கும்’ எனும் அம்சத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ரத்தம்’.

ADVERTISEMENT

இதில் விஜய் ஆண்டனி, மஹிமா, நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரி, படம் எப்படி இருக்கிறது?

ADVERTISEMENT

குற்றமும் பின்னணியும்!

வானம் எனும் ஒரு ஊடக அலுவலத்திற்குள் நுழைந்து, அதன் உரிமையாளர் செழியனைக் குத்திக் கொல்கிறார் ஒரு நபர். அப்போது, அந்த இடத்தில் பல பேர் நிறைந்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

தனக்கு மிகவும் பிடித்த கட்சித் தலைவர் தமிழ்செல்வனைக் குற்றம்சாட்டி தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியிட்டதே அதற்குக் காரணம் என்று வாக்குமூலம் அளிக்கிறார் அந்தக் கொலையாளி. சம்பவம் நடந்த இடத்தை விட்டு அவர் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை.

அதே பாணியில், காஞ்சிபுரத்தில் ஒரு ஆட்சியர் கொலை செய்யப்படுகிறார். இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மிகப்பெரிய நிறுவன உரிமையாளர் ஒருவரும் அவ்வாறே கொல்லப்படுகிறார். மூன்று சம்பவங்களிலும் கொலையாளிகள் அந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அவர்கள் நெஞ்சில் மிகுந்திருந்த வெறுப்பே அக்கொலைகளுக்குக் காரணமாக உள்ளது.

செழியனின் நண்பரான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி) அந்த ஒற்றுமையைக் கண்டறிகிறார். இந்தியாவின் மிகப்பெரிய புலனாய்வு பத்திரிகையாளராகத் திகழ்ந்த அவர், தனது மனைவியின் மறைவை அடுத்து ஊடக உலகை விட்டு ஒதுங்கியிருக்கிறார். மகள் அரும்பாவை உடன் கொல்கத்தாவில் தனியாக வாழ்கிறார்.

மது போதைக்கு அடிமையான ரஞ்சித்தையும் அவரது மகளையும் சென்னைக்கு வந்துவிடுமாறு அழைக்கிறார் செழியனின் தந்தை (நிழல்கள் ரவி). அதன்பிறகு, மீண்டும் சென்னைக்கு வரும் ரஞ்சித் வானம் அலுவலகத்திலேயே ஒரு நிருபராகச் சேர்கிறார். அப்போதுதான், செழியன் கொலைக்கும் இதர கொலைகளுக்குமான ஒற்றுமையைக் கண்டறிகிறார்.

அதன் தொடர்ச்சியாக, இந்த குற்றத்தின் பின்னணியில் ஒரு நபரோ அல்லது ஒரு அமைப்போ இருக்கலாம் என்று யோசிக்கிறார் ரஞ்சித். தன்னைக் கண்காணித்து வரும் ஒரு நபர் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறார். அவரது சிந்தனை சரி என்றாகிறது. செழியனைக் கொன்ற நபர், கொலை நடப்பதற்கு முன்னதாக அந்த மனிதரைத்தான் சந்தித்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அந்த நபர் (பிகில் சிவா) காணாமல் போகிறார்.

அதே நேரத்தில், மற்ற கொலைகளிலும் இதே போன்று சில நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

அதன்பிறகு என்ன நடந்தது? சம்பந்தப்பட்ட கும்பலை ரஞ்சித் கண்டுபிடித்தாரா? அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தாரா என்று நீள்கிறது ‘ரத்தம்’ திரைக்கதை.

தொடரும் ‘த்ரில்’!

கொட்டும் அருவி போல வசனத்தை உதிர்ப்பதோ, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவையை உருண்டோடச் செய்வதோ, நாயகியுடன் காதலில் திளைப்பதோ அல்லது உருகச் செய்யும் நடிப்பை ஓடச் செய்வதோ விஜய் ஆண்டனியின் நடிப்பு பாணி கிடையாது. உர்ரென்ற முகத்துடன் வந்து, இதர கதாபாத்திரங்களுடன் மெல்லிய குரலில் பேசி, முரட்டுத்தனமாகக் களமிறங்கி ஆக்‌ஷனில் அதகளப்படுத்துவதே அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காண வைத்திருக்கிறது. அதையே ‘ரத்தம்’ படத்திலும் அவர் தொடர்ந்திருக்கிறார்.

வில்லத்தனத்தை வெளிப்படுத்துபவர்களாக மஹிமாவும் மிஷாவும் நடித்துள்ளனர். மஹிமாவின் தோற்றமும் உடல்மொழியும் நிச்சயம் பார்வையாளர்களைக் கவரும். இவர்கள் தவிர்த்து நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசனும் படத்தில் உண்டு. இருவரில் நந்திதா மட்டும் ஓவர் மேக்கப்புடன் வந்து நம்மைப் பயமுறுத்துகிறார்.

நிழல்கள் ரவி, உதய் மகேஷ், ஓஏகே சுந்தர், அமேயா, கலைராணி, ஜான் மகேந்திரன் என்று பலர் இதில் நடித்துள்ளனர்.

அதிஷா, கார்கி பவா, தோழர் ஆதி உடன் இணைந்து இயக்குனர் சி.எஸ்.அமுதன் இப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியுள்ளார். காட்சிகள் புதிதல்ல என்றபோதும், அவை எழுதப்பட்ட விதம் வித்தியாசமாக அமைந்திருப்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். மஹிமா தன் மகளுடன் வீட்டில் இருக்கையில், மகளுடன் சென்று விஜய் ஆண்டனி அவரைச் சந்திக்கும் காட்சி அதிலொன்று.

அதேநேரத்தில், காவல் ஆணையர் அலுவலக வளாகத்திற்குள் ‘ஜஸ்ட் லைக் தட்’ சென்று திருடிவிட்டு வருவது போன்ற ‘லாஜிக்’ சிறிதுமற்ற காட்சிகளும் இதில் உண்டு.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை ‘பளிச்’சென்று திரையில் காட்ட உதவியிருக்கிறது. செந்தில் ராகவன் கலை வடிவமைப்பானது கலர்ஃபுல்லான ஊடக அலுவலகமொன்றைக் காட்டிய வகையில் நம்மைக் கவர்கிறது.

டி.எஸ்.சுரேஷின் படத்தொகுப்பு ரொம்பவே சுருக்கமாகத் திரையில் தகவல்களைச் சொல்ல முயன்றிருக்கிறது. விஜய் ஆண்டனியின் பிளாஷ்பேக் தவிர்க்கப்பட்டிருப்பதையும் அந்த வரிசையின் கீழ் கொண்டுவரலாம்.

ஒவ்வொரு காட்சியையும் தனித்தனி எபிசோடாக கருதி பின்னணி இசை தந்திருக்கிறார் கண்ணன் நாராயணன். இடைவேளைக்குப் பிறகு ‘த்ரில்’ தொடரும் இடங்களில் அவரது பங்களிப்பு அருமை. அவரது இசையில் ’ரத்தம் ரத்தம்’, ‘ஒருநாள்’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன.

கொஞ்சம் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லர் தர வேண்டுமென்ற எண்ணத்தில் ‘ரத்தம்’ கதையை ஆக்கியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். ஆனால், அதற்கேற்ற கதாபாத்திரங்கள், களங்கள், பின்னணியை அமைத்த வகையில் நேர்த்தி கூட்ட தவறியிருக்கிறார்.

சரிந்த இடம்!

விஜய் ஆண்டனி பாத்திரம் வெறுமையில் தவிக்கிறது; குடி போதையில் உழல்கிறது என்று எழுத்தில் வடித்திருப்பது நல்ல விஷயம். ஆனால், திரையில் காட்சியாக விரிகையில் அது செயற்கையாகத் தெரிகிறது.

ரம்யா நம்பீசன், மஹிமா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் முறை வைத்து நான்கைந்து காட்சிகளில் வந்து போனாலும், அவர்களது பின்னணி முழுமையாகக் காட்டப்படவில்லை. எல்லோருக்கும் ஒரு பிளாஷ்பேக் சொல்ல முடியாது என்றபோதும், கொஞ்சம் அழுத்தமாகக் காட்சிப்படுத்துவதற்கான உத்திகளைக் கையாண்டிருக்கலாம்.

பாதுகாப்பு மிகுந்த ஆணையர் அலுவகத்திற்குள் நுழைவது, தரவுகளை வைத்துக்கொண்டு வில்லன் கோஷ்டி ஆட்டம் காட்டுவது, உளவியல்ரீதியில் மிக இலகுவான நபர்களை அடையாளம் காண்பது போன்றவை பார்க்க வித்தியாசமாகத் தெரியலாம்; ஆனால், அவை நமது நம்பிக்கையைப் பெற பெரிதாக மெனக்கெட வேண்டும். அது நிகழாத காரணத்தால், ‘இதுல லாஜிக்கே இல்ல’ என்று எளிதாகப் பார்வையாளர்கள் சொல்லிவிடலாம்.

அனைத்தையும் தாண்டி விஜய் ஆண்டனி ஒட்டியிருக்கும் தாடியும் மீசையும் ரொம்பவே துருத்தலாகத் தெரிகின்றன. பெரும் செலவில் எடுக்கப்படும் ஒரு படத்தில், சரியான முறையில் ஒப்பனை செய்ய கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாதா?

’கொலையாகும் நபரும் கொலையாளியும் பாதிக்கப்பட்ட தரப்பில் அடங்குவர்’ என்பதை மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’ படமே சொன்னது. 2017இல் கொரிய மொழியில் வெளியான ‘தி பேப்ரிகேட்டட் சிட்டி’ படத்தில், கிட்டத்தட்ட அதே பாணியில் ஒரு தனிநபர் ராஜாங்கமே நடத்துவது காட்டப்பட்டிருக்கும். அதன் இன்னொரு பதிப்பாகவே, கறைகளின் பின்னிருக்கும் உண்மைகளைக் கண்டறிவதாக ‘ரத்தம்’ கதை அமைக்கப்பட்டுள்ளது.

எளிதான திருப்பங்கள், சின்னச் சின்ன ஆச்சர்யங்கள், முதலில் இடப்பட்ட முடிச்சுக்கு இறுதியில் தீர்வு காண்பது என்று அமைந்திருக்கிறது ‘ரத்தம்’ திரைக்கதை. பொழுதுபோக்காக ஒரு த்ரில்லர் பார்க்கலாமா என்று அமர்பவர்களை மட்டுமே இப்படம் திருப்திப்படுத்தும். மற்றபடி, கருத்து கந்தசாமிகளைக் கதாநாயகர்களாகக் கொண்ட நேர்த்தியான ஆக்‌ஷன் மசாலா படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஒவ்வாமையை ஏற்படுத்தும்!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜிகர்தண்டா Double X : ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது!

போர் மூண்ட இஸ்ரேலில் சிக்கிய தமிழர்கள்… உதவி எண்கள் அறிவிப்பு!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share