தவெக மாநாடு எப்போது? – விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கினார். தவெக கொடியை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அறிமுகப்படுத்தினார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து முதல் மாநில மாநாடு செப்டம்பர் 23-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டிற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி கொடுத்தனர்.

இந்தநிலையில்,  மாநாட்டுக்கான பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு தேதியை ஒத்திவைத்து விஜய் அறிவிக்க உள்ளதாக கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தவெக மாநாட்டை தள்ளி வைக்கிறார் விஜய்? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்தநிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு குறித்த அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கட்சி நிர்வாகிகளின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. தவெக கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

ADVERTISEMENT

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கட்சியின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாக இருக்கும்.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா? – ஆட்சியர் விளக்கம்!

வேலைவாய்ப்பு: சென்னை எம்டிசி-யில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share