விஜய் 67 படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே, அதற்கான வியாபாரம் நடந்து முடிந்துவிடும் என்று வினியோகஸ்தர்கள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் வாரிசு. இது அவர் நடிக்கும் 66வது படமாகும். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தைத் தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே விஜய் நடிக்க உள்ள 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. இது ஏற்கனவே விஜய் கொடுத்த வாக்குறுதிப்படி ஒப்புக்கொண்ட படம்.
மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த லலித்குமார், கொரோனா பொது முடக்கக் காலத்தில் எல்லா பிரச்சினைகளையும் கடந்து மாஸ்டர் படத்தை வணிக ரீதியாக வெற்றிபெற வைத்தவர். அவரது நிறுவனம் தான் 67வது படத்தைத் தயாரிக்கிறது. மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தையும் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். மலையாள நடிகர் பிருத்விராஜ் இந்தி நடிகர் சஞ்சய் தத்து ஆகியோர் விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்களுடன் மூன்றாவதாக இயக்குநர் கௌதம்மேனனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு, வெளியீட்டுத் தேதி எப்போது என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஆனால் வியாபார பேச்சுவார்த்தைகளை வலைதள நிறுவனங்கள் தொடங்கி இருக்கின்றன.
ஓடிடி ஒளிபரப்பு உரிமைக்காக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய் விலை தர தயார் என கூறியிருக்கிறது. அதேபோல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக 75 கோடி ரூபாய் வரை கொடுக்க தமிழில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் விருப்பம் தெரிவித்திருக்கிறது. சஞ்சய்தத், பிருத்விராஜ் படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பது உறுதியானால் படத்தின் இந்தி உரிமைக்கு ஐம்பது கோடி வரை கொடுக்கவிருப்பம் தெரிவித்துள்ளனர் வட இந்திய வினியோகஸ்தர்கள்.
கடந்த சில நாட்களாகத் தமிழ் சினிமாவில் உலாவும் இந்த செய்திகளின் உண்மை தன்மையை உறுதி செய்ய மும்பை, சென்னையில் உள்ள வியாபார ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசிய போது,
“விக்ரம் வெற்றிக்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம், கேஜிஎஃப் வெற்றிக்கு பின் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கும் படம் வாரிசு. கௌதம்மேனன் இயக்கும்
படத்தைக் காட்டிலும் அவர் நடிக்கும் படங்களை இன்றைய இளம் தலைமுறை விரும்பி பார்க்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் பிருத்விராஜ் இணைவதால் சர்வதேச அளவில் இதற்கான பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது அதனால் வணிக மதிப்பும் கூடும்.
படத்தைத் தயாரிப்பது லலித்குமார், திட்டமிட்ட அடிப்படையில் படப்பிடிப்பை முடித்து வெளியிடக்கூடியவர். இவர்கள் எல்லாம் ஒன்றிணைவதால் வணிக மதிப்பு அதிகரித்துப் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே வியாபாரம் முடிவடையும். இது விஜய் என்கிற கதாநாயகனுக்கான வியாபாரம் இல்லை அவருடன் நடிக்கும் கூட்டணிக்கான வணிக மதிப்பு” என்றனர்.
இராமானுஜம்