டாஸ்மாக் ரெய்டுக்கு பதில் சொல்ல தெரியாமல் அதிமுகவினர் வீட்டில் ரெய்டு நடத்த ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத் துறையை அனுப்பியிருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். vigilance raid in admk ex minister
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பா.நீதிபதி., அதிமுக சார்பில் கடந்த 2016 முதல் 2021 வரை உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்தார். தற்போது வரை அதிமுகவின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இன்று (மே 17) காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரது வீட்டில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடந்து வருகிறது.

இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன், முன்னாள் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதியையும் குறிவைத்து ஸ்டாலின் மாடல் திமுக அரசின் ஏவல்படைகளுள் ஒன்றாக மாறிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
டாஸ்மாக் வழக்கில் நடக்கும் ED ரெய்டுகள் ஸ்டாலின்-க்கு பயத்தை உருவாக்கியிருக்கிறது ,பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பழிவாங்கும் நடவடிக்கையாக அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அஇஅதிமுக-வினர் வீட்டிற்கு தன் ஏவல்துறையை அனுப்பியுள்ளார்.
டாஸ்மாக் ரெய்டுகள் குறித்து ஸ்டாலின் மக்களிடம் எப்போது மவுனம் கலைக்கப் போகிறார்?
பின்னப்பட்ட புனைகதைகளால், போலி வழக்குகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த ரெய்டுகள் அதிமுக இயக்கத்தை அசைத்து கூட பார்க்க முடியாது.
இவை அனைத்தையும் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என்று கூறியுள்ளார். vigilance raid in admk ex minister
