2016 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அறிக்கையை திமுக நேற்று வெளியிட்டது. டாஸ்மாக் தொடங்கி அணு உலை போராட்ட வழக்குகள் வரை பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அரசியல் அரங்கில் கவனிப்பைப் பெற்றுள்ள திமுக அறிக்கை தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. அவைகளின் தொகுப்பு இதோ,
பேரா. அ.மார்க்ஸ்
கூடம்குளம் போராட்டம் நடந்தபோது போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை எங்களால் முடிந்தவரை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோதும் போராட்டத் தலைமையின் மீது நாங்கள் மெல்லிய குரலில் தொடர்ந்து வைத்து வந்த விமர்சனகளில் ஒன்று தேவை இல்லாமல் இப்படி ஒரு எதிர்க்கட்சியையும் (திமுக) அதன் தலைவரையும் (முக) இப்படிக் கடும் எதிரியாகப் பாவிப்பதையும், பல நேரங்களில் சற்றே தரம் தாழ்ந்து விமர்சிப்பதையும் கைவிட வேண்டும் என்பது. மக்களை திரட்டி நடத்தும் ஒரு பொதுப் போராட்டத்தில் தலைமைக்கு என்ன அரசியல் நிலைபாடு இருந்த போதிலும் இப்படியான வெளிப்படையான பக்கச் சார்பு போராட்டத்திற்குக் கேடு பயக்கும் என்பது எங்களுக்கு ஆசிரியர் இயக்கப் போராட்டங்கள் கற்றுத் தந்த பாடம்.
நம்பியிருந்த ஜெயலலிதா கைவிட்டார். கடைசி வரை முழுமையாக வழக்குகளைக் கைவிட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. வரவேற்போம்.
பேராசிரியர் ராஜ்
திமுக தேர்தல் அறிக்கை: ஒரு பறவை பார்வை!
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒரு நீதியான சமூகத்திற்கான விழைவு இருக்கிறது. விவசாயம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட் மற்றும் இடைத்தரகர்களை ஒழிக்கும் எண்ணம் கொண்ட வேளாண் விளைபொருள் பரிவர்த்தனை அமைப்பு ஆகியவை விவசாயிகள் வாழ்வில் சிறு ஏற்றத்தை கொண்டு வரலாம்.
அறிக்கையின் 37-வது பகுதி முக்கியமானது. இந்தியாவில் வேளாண் துறையை அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளில் இருப்பதை போன்று சிலருடையதாக மட்டும் வைத்து விட்டு, சிறுகுறு விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவது மோடி அரசின் திட்டம். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் சரத்துகளில் அடிநாதமாக ஒலித்தது இது தான். திமுக தேர்தல் அறிக்கை இளைஞர்களை விவசாயத்துக்கு ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது.
ஒவ்வொரு ஊரிலும் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் கூட்டுறவு அமைப்புகளில் இணைந்து அங்கு அளிக்கப்படும் உதவித்தொகையை பெற்று டிராக்டர்கள் மற்றும் நடவு, அறுவடை இயந்திரங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இதனை தாராளமயத்துக்கு மாற்றான புரட்சிகர திட்டம் என்று சொல்ல முடியாது. எனினும் ஏதோ ஒரு வகையில் வஞ்சிக்கப்படும் மக்களின் துயரை ஆற்றுகிறது.
கலப்புத் திருமணம் புரிவோரில் ஒருவர் தலித்தாக இருந்தால் மட்டுமே அரசின் ஊக்கத்தொகையை பெற முடியும் என்றிருப்பது சிறப்பு. இதனை அறியாமல் முகநூலில் பலரும் இரு வேறுவேறு உயர்சாதியினரின் கலப்புத் திருமணத்துக்கும் உதவித்தொகையா? என்று பொருமிக் கொள்கின்றனர். சமச்சீர்க் கல்வி திட்டத்தை ஆண்டு தோறும் ஆய்வுக்குட்படுத்த முடிவு செய்திருப்பது நல்ல முடிவு.
டாஸ்மாக் வருவாயை ஈடுகட்ட ஆற்று மணல்/கனிமவள விற்பனையை தனியாருடன் இணைந்து அரசு நிர்வகிப்பதில் பெறும் என்று கருத முடிகிறது. எனினும் அது குறித்த நேரடியான அறிவிப்பில்லை. மத்திய பா.ஜ.க அரசின் குணத்தை நன்கு புரிந்து கொண்டே பெரும்பாலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெளிப்படையான நிர்வாகத்துக்கு ஊக்குவிப்பு இருக்கிறது. அணு உலை வழக்குகள் வாபஸ் வாங்கப்படும் என்றதை ஏற்காமல் குதிக்கும் போராளிகள் அதிமுக மற்றும் பாஜக தேர்தல் அறிக்கைகள் வரும் போது இதை விட உக்கிரமான எதிர்ப்பை காட்டுவார்கள் என்று நம்புவோமாக. மத்தியில் பாஜக அமர்ந்திருக்க மாநில சுயாட்சி மற்றும் மாநில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு திமுகவால் என்ன பெரிய முன்னேற்றத்தை சாதிக்க முடியும் என்று தெரியவில்லை.
நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்த அது தனித்துறையாக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது. மது விலக்கை ஒற்றை வரியில் கடந்து செல்ல நினைக்காமல், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் நலன் முதற்கொண்டு அது சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் தொட்டிருப்பது மதுவிலக்கில் திமுகவின் உறுதியை காட்டுகிறது.
பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களுக்கு போலீசின் உதவியை உடனடியாக நாட ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உயர்நீதிமன்றத்தில் தமிழ் மத்தியில் பா.ஜ.க இருக்கும் வரை சாத்தியமா என்று தெரியவில்லை. உக்கிரமான போராட்டங்கள் தேவைப்படும் ஒன்று. திமுக அதற்கு தயாராக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.
எஸ்.பி. உதயகுமார்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூடங்குளம்
தி.மு.க.வினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவார்களாம். என்னே அன்பு, என்னே அக்கறை! கடந்த ஐந்தாண்டுகளாக நாங்கள் போராடிக்கொண்டிருப்பது பாசிச ஜெயா அரசு எங்கள் மீது போட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறுவதற்காக அல்ல. தரமற்ற, பாதுகாப்பற்ற கூடங்குளம் அணு உலைகளை மூடுவதற்காக! அங்கே கூடுதல் அணு உலைகள் கட்டாமல் இருப்பதற்காக! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இது புரியவில்லையா, அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? அடிப்படை பிரச்சினையை விட்டுவிட்டு, அதையும் இதையும் பேசி ஆளை ஏய்க்கும் வேலையை இனியாவது கைவிடுங்கள்!
எல்.ஆர் ஜெகதீசன், ஊடகவியலாளர்
திமுக தேர்தல் அறிக்கை குறித்து உண்மையிலேயே எதிர்மறையாக விமர்சிக்க வேண்டுமானால் பொருளாதார ரீதியில் இவை சாத்தியமா? சாத்தியமில்லையா? என்கிற அடிப்படை கேள்வி எழுப்புவதே சரியானதும் எளிமையானதுமான வழி.
உதாரணமாக கல்விக்கடன் தள்ளுபடி மற்றும் பால்விலை குறைப்பு ஆகிய இரண்டுமே பரவலான வரவேற்பை பெறக்கூடிய வாக்குறுதிகள். ஆனால் இவற்றை நிறைவேற்றவேண்டுமானால் அதற்கு ஆகும் செலவு எவ்வளவு? அதற்கான நிதி வளங்களை எங்கிருந்து திரட்டுவதற்கு திமுக உத்தேசித்துள்ளது? அது சாத்தியமா? சாத்தியப்படாதா? பால்விலையை குறைப்பது என்பது நகரத்தில் பால் வாங்குபவர்களின் பார்வையில் வரவேற்கப்படலாம்.
ஆனால் பாலை உற்பத்தி செய்யும் விவசாயி இதனால் பாதிக்கப்படாமல் இருக்க திமுக என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்கிற அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விவாதம் செய்வதே சரி. அதைவிட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது திமுகவுக்கே சாதகமாக அமையும். ஒரு அரசின் வலிமையும் அடிப்படையும் அதன் பொருளாதார வலிமையிலேயே தங்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் மாநில பொருளாதாரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. திமுக தேர்தல் அறிக்கையை முன்வைத்தேனும் மாநில நிதிவள ஆதாரங்கள் குறித்து விவாதிப்பது அவசியம்.
ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்)
CSR நிதிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்!
கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டியின் கீழ் (CSR) தொழில் நிறுவனங்களால் செலவிடப்படும் தொகைக்கு வரி விலக்கு வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் CII அமைப்பின் தலைவராகப் பிறுப்பேற்ற அஜய் ஶ்ரீராம் கூறினார்.
அதை அப்போது வரவேற்று எனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசினேன். CSR தொகை எவ்விதம் செலவிடப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டு நெறிகளை உருவாக்கி அதை மேற்பார்வை செய்ய கார்ப்பரேட் நிறுவனப் பிரதிநிதிகளும் அரசாங்கப் பிரதிநிதிகளும் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன்.
நான் MLA ஆக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் நான் எழுப்பிய இந்தக் கோரிக்கையை ஏற்றுதான் மாநில அரசின் தொழில் நிறுவனங்களின் லாபத்தில் 2% CSR க்கு ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு அன்றைய திமுக அரசால் வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் அந்த அறிவிப்பு காற்றோடு போய்விட்டது. CSR நிதிக்கு வரிவிலக்குச் செய்ய வேண்டியது மத்திய அரசு மட்டுமல்ல, மாநில அரசும்தான்.
வினி ஷர்ப்பனா
திமுக ’தெறி’க்கை!
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மட்டுமல்ல தாசில்தாரில் ஆரம்பித்து வி.ஏ.ஓ. மற்றும் கடைநிலை ஊழியர்களான ஆஃபிஸ்பாய் வரை, அரசு ஊழியர்கள் யார் லஞ்சம் வாங்கினாலும் நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளரிடம் அனுமதி கேட்டுக் காத்திருக்கும்… அரசின் அங்கமாகத்தான் இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
ஆனால், ஊழல் கண்காணிப்பு மற்றும் மக்கள் குறைதீர்ப்பு ஆணையமாக செயல்பட்டு முதல்வரே (உதா:எடியூரப்பாவை) ஊழல் செய்தாலும் யாருடைய அனுமதியையும் கேட்காமல் விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிரூபித்த “லோக் ஆயுக்தா’’ சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவருவோம் என்றும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அரசின் சேவை கிடைக்காமல் காலதாமதமாகிக் கொண்டிருந்தால் தாமதித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு அபராதமும் விதித்து அதை புகார் கொடுத்தவருக்கு இழப்பீடாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தையும் தேர்தல் அறிக்கையாக அறிவித்த திமுகவுக்கு பாராட்டுகள்!
வினோத் களிகை , இளந்தமிழகம் அமைப்பு
இந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகள் போராட்டங்கள் நிரம்பி இருந்தது. விவசாயம் நலிவடைந்து வரும் சூழலில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவித்திருப்பது வரவேற்க்கதக்கதே.
தனியார்மய கல்வியால் கடன் வாங்கித்தான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டிய சூழ்நிலை.
இந்நிலையில் அவர்களின் கல்வி கடன் ரத்து என்பது நல்ல விஷயம். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி கொண்டு வருவதாக அறிவித்திருப்பது சிறப்பு. நலிவான கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தினால் அதனால் கூடுதலாக மாணவர்கள் பயன்பெறுவார்கள். கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
அரசுத்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆறு மாத விடுப்பை ஒன்பது மாதமாக நீட்டித்தது தனி சிறப்பு. அந்த காலகட்டத்தில் கணவருக்கும் மூன்று மாத விடுப்பு கொடுக்கலாம். மேலும் தனியார்துறையிலும் இதை அமுல்படுத்த உத்தரவிடலாம்.
மதுவிலக்கை அறிவித்துருக்காங்க. ஆனால் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைபடுத்துவதில் இருந்துதான் அதுகுறித்து பேசமுடியும். முன்பை விட தேர்தல் அறிக்கை மேம்பட்டுருக்கு. அதுக்கு முக்கிய காரணமா நான் பார்ப்பது ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தைதான். இதுவரை மக்களைவிட்டு தள்ளி இருந்தார்கள். தற்போது மக்களிடம் அவர் நேரடியாக சென்றபோதுதான் அவர்களின் இன்னல்களை அவரால் உணர முடிந்துள்ளது. அதன் தாக்கம் தான் மக்களுக்கான விஷயங்கள் பல அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
எனவே ஸ்டாலினுடன் நிற்காமல் தொடர்ந்து அனைத்து தலைவர்கள் , திமுக இரண்டாம் கட்ட தலைவர்களும் தொடர்ந்து மக்களை சந்திக்கவேண்டும். மீத்தேன் திட்டம், கூடங்குளம் திட்டம் குறித்து தெளிவான ஸ்டாண்ட் இல்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மத்திய அரசு அலுவலங்கங்களில் தமிழ் கொண்டு வருவோம் என்று சொன்னது வரவேற்கலாம். ஆனால் அதை எப்படி நடைமுறைபடுத்துவார்கள் என்று தெரியவில்லை” என்றார்.