நாட்டையே அதிர வைத்த மோசடி வழக்கு: கோடீஸ்வரப் பெண்ணுக்கு மரண தண்டனை!

Published On:

| By Selvam

வியட்நாம் நாட்டையே அதிர வைத்த மோசடி வழக்கில் அந்த நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரப் பெண் திராங் மை லானுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வியட்நாம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பல்வேறு தொழிலதிபர்கள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்டவர்களில், கோடீஸ்வரப் பெண் திராங் மை லானும் ஒருவர். இவரது நிறுவனமான வான் தின் பாட் நிறுவனத்தின்கீழ், உயர்தர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும்  சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. நிதிச் சேவைகளிலும் இந்த நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

சாய்கோன் கமர்ஷியல் வங்கியின் சுமார் 90 சதவிகிதப் பங்குகளை வைத்திருந்த லான், போலி கடன் விண்ணப்பங்களைப் பயன்படுத்தி அந்த வங்கியில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ADVERTISEMENT

10 ஆண்டுகளுக்கும் மேலாக லான், இந்த மோசடியில் ஈடுபட்டதாகவும், இதனால் வங்கிக்கு 27 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தத் தொகை வியட்நாமின் 2023 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆறு சதவிகித்துக்கு சமம் என்று கூறப்படுகிறது

ADVERTISEMENT

நாட்டையே அதிர வைத்த இந்த மோசடி வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், லான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதிகள் நேற்று (ஏப்ரல் 14)  அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளனர். வியட்நாமில் இத்தகைய வழக்கில் மரண தண்டனை என்பது வழக்கத்துக்கு மாறாக கடுமையான தண்டனையாகக் கருதப்படுகிறது.

இதே போல் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 85 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. லஞ்சம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் முதல் நிதி கையாடல் மற்றும் வங்கிச் சட்டத்தை மீறுதல் வரை பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை லான் மறுத்துள்ளார். தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் தான் இதற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட விசாரணைக்காக லான் கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜரானபோது, தான் கடுமையான விரக்தியில் இருப்பதாகவும், தற்கொலை செய்யத் தோன்றுவதாகவும் கூறினார்.

“நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இந்தக் கடுமையான வணிகச் சூழலில், வங்கித் துறையில் எனக்கு சிறிதும் அறிவு இல்லை” என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: கோடைக்கு ஏற்றதா ஐஸ் வாட்டர் ஃபேஷியல்?

கிச்சன் கீர்த்தனா: பெரிய நெல்லி சட்னி

சல்லிசல்லியா நொறுக்கிட்டாங்க… மும்பையிடம் மொத்தமாக சரணடைந்த பெங்களூரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share