விடுதலை 2: கொஞ்சம் காதல்… நிறைய ஆக்ஷன்…. கெத்து காட்டும் விஜய் சேதுபதி

Published On:

| By Selvam

தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன், ஆகிய படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்ததுடன் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களாகும். இந்த படங்களை இயக்கிய வெற்றிமாறன் தமிழில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான விசாரணை படத்தை தவிர பிற முன்னணி நடிகர்கள் நடிப்பில் படங்களை இயக்கவில்லை.

இந்தநிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட” துணைவன்” வணிகத்துக்காக விடுதலை என பெயர் மாற்றப்பட்டது. இந்தப் படத்தில் காமெடி நடிகராக வலம் வந்த புரோட்டா சூரி கதை நாயகனாக நடிக்கிறார், படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என தகவல் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, வியாபார வட்டாரமும் அதிர்ந்து போனது.

காமெடியன் கதாநாயகனா? கல்லா கட்டுவது கஷ்டம் என கூறப்பட்ட நிலையில், கெளரவ வேடத்தில் விஜய் சேதுபதி , இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  இளையராஜா இசையமைக்கிறார் என அறிவிப்புகள் வெளியான பின்பு விடுதலை படத்திற்கான வணிக மதிப்பு ஏற்பட்டது.

உடல்நிலை காரணமாக பாரதிராஜா படத்தில் இருந்து விலக, அவரது கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்க ஒப்பந்தமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற படமாக விடுதலை இருக்க, தயாரிப்பு செலவு திட்டமிட்டதைக் காட்டிலும் இருமடங்கு ஆனதால் விடுதலை இரண்டு பாகங்களாக வெளியிடுவது என தயாரிப்பாளர் எல்ரெட் குமார், வெற்றிமாறன் இருவரும் கூட்டாக முடிவு செய்து அறிவித்தனர். அதன் அடிப்படையில் விடுதலை- 1 கடந்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வெளியானது.

இதில் சூரி, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ்மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இளவரசு, சரவண சுப்பையா, போன்ற பலர் நடித்திருந்தனர். சூரியை காமெடி நடிகர் என்கிற தளத்தில் இருந்து, கதையின் நாயகனாக மாற்றியது. இந்த படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து,  இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், விடுதலை 2 படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் விஜய் சேதுபதி இறுதிகாட்சியில் வருவதுடன் படம் முடிவடையும். தற்போது வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரை பார்க்கும் போது படம் முழுக்க விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டிருக்கும் என தெரிகிறது. அத்துடன் அவரது மனைவியாக மலையாள நடிகை மஞ்சுவாரியார் நடித்திருக்கிறார் என முதல் பார்வை உணர்த்துகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் சேதுபதி ஓடி வருவது போன்றும், இரண்டாவது போஸ்டரில் விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு போஸ்டர்களிலும் பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார் என்பதாகும் என்ற பொருள்படும் “உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்”  என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதற்கான விடை விடுதலை – 2 படம் வெளியானால் மட்டுமே தெரியும். படம் எப்போது திரைக்கு வருகிறது என்பது அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேலைவாய்ப்பு: TNLDA- வில் பணி!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share