அமித் ஷா, அண்ணாமலைக்கு நாடார் சங்கங்கள் கண்டனம்: தமிழிசையின் அடுத்த திட்டம் என்ன?

Published On:

| By Aara

தமிழக பாஜகவின் முன்னால் தலைவரும், தெலுங்கானா -புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று  (ஜூன் 12) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் எச்சரித்த வீடியோ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ‘எங்கள் தலைவர் அண்ணாமலையை எதிர்த்தால் இப்படித்தான் ஆகும்’ என்கிறார்கள் அண்ணாமலை ஆதரவாளர்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக டாக்டர் தமிழிசை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தொடர்ந்து பேசி வருகிறார்.

அதிமுக -பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுக ஒரே ஒரு இடத்தில் கூட வென்றிருக்க முடியாது. ஆனால் அண்ணாமலை அந்த வியூகத்தை அமைக்க வில்லை என்று பகிரங்கமாக கூறினார் தமிழிசை.

மேலும் தன்னை பாஜகவின் உட்கட்சி இணையதள வாசிகள் கடுமையாக விமர்சிப்பதையும் எச்சரித்தார்.

இதோடு இல்லாமல் தற்போதைய பாஜகவில் சமூக விரோதிகள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்றும் ஒரு பேட்டியில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாவது முறையாக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சிக்காக டெல்லி சென்றவர்… அங்கே தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி. எல். சந்தோஷை சந்தித்து தமிழிசை பற்றி புகார் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை ஜூன் 11ஆம் தேதி கோவை விமான நிலையத்தில், ’இனி பாஜகவில் பத்திரிக்கையாளர் சந்திப்புகள் ஒழுங்குபடுத்தப்படும். தலைமை அனுமதியோடுதான் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடக்கும். கண்ட கண்ட இடத்தில் பேட்டி கொடுக்க முடியாது. கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி அளிக்க முடியும்’ என்று தெரிவித்தார். இது மறைமுகமாக தமிழிசைக்கு அவர் விடுத்த எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே பி. எல். சந்தோஷிடம் அண்ணாமலை கொடுத்த புகார் அமித்ஷா வரைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மேலும் புதுச்சேரியில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்ற நமச்சிவாயமும் ஆளுநராக இருந்த தமிழிசை மீது சில புகார்களை அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார்.

இதெல்லாம் சேர்ந்துதான் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் தமிழிசையிடம் அமித்ஷா கோபப்பட்டதற்கு காரணம் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

என்னதான் உட்கட்சி பிரச்சனைகள் இருந்தாலும், அதை இப்படி பொது மேடையில் வெளிப்படுத்தலாமா என்ற கண்டன குரல்கள் பாஜகவுக்கு வெளியே எழுந்துள்ளன.

இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பந்தப்பட்டுள்ளதால் பாஜகவில் யாரும் வாய் திறக்கவில்லை.

கேரள காங்கிரஸ் கட்சி தமிழிசை சுயமரியாதை உணர்வோடு பாஜகவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது.

தமிழகத்தில் தமிழிசைக்கு ஆதரவாக நாடார் சங்கங்கள் அண்ணாமலைக்கும் அமித்ஷாவுக்கும் எச்சரிக்கை விடுத்து அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டி உள்ளன.

இந்த நிலையில் ஆந்திர சம்பவத்துக்கு பிறகு நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்த தமிழிசை, செய்தியாளர்கள் சுற்றி வளைத்த போது எதுவும் பதில் சொல்லாமல் புன்னகைத்தபடி புறப்பட்டு விட்டார்.

தமிழிசைக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் நேற்று மாலை நாம் பேசிய போது,

“இந்த பக்கம் வெங்கையா நாயுடு… அந்த பக்கம் ஜே.பி. நட்டா என இருவரும் தமிழிசை மீது மரியாதை மிக்கவர்கள். இவர்கள் நடுவில் அமர்ந்திருந்த அமித்ஷா… தமிழிசையை கையசைத்து அழைத்து ஆட்காட்டி விரலை காட்டி எச்சரித்த விதம் அவரைக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது.

வீட்டுக்கு வந்த அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களும் நண்பர்களும் அவரோடு பேச முயற்சித்தும் முடியவில்லை.

சிலர் அவரை வேறு சில எண்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அப்போது, ’ தமிழ்நாடு பாஜகவில் நடந்து கொண்டிருக்கும் விஷயங்கள் பற்றி விரிவான கடிதம் எழுதி பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோருக்கு அனுப்புங்கள்’ என்று அவருக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.

விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்கும்படியும் தமிழிசையிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

<code

அதன்படி தனது செய்தியாளர் சந்திப்பின் முழுமையான வீடியோ பதிவுகள்,  பேட்டிகளின் முழுமையான பதிவுகள் ஆகியவற்றையும், தன் மீது அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக தளங்களில் நடத்தும் தனி மனித தாக்குதல் பதிவுகளையும் தேசிய தலைமைக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார் தமிழிசை” என்கிறார்கள்.

இந்நிலையில் தமிழிசை சென்னை திரும்பிய நிலையில் ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும்,  உபசரிப்பு நன்றி தெரிவித்தும் புகைப்படங்கள், வீடியோக்களை தனது எக்ஸ் பதிவுகளில்  இன்று அதிகாலை முதல் காலை வரை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

வேந்தன்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!

டாப் 10 செய்திகள் : மோடி இத்தாலி பயணம் முதல் நீட் தேர்வு குளறுபடி விசாரணை வரை!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share