துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த 59 எம்.பிக்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி’ தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளனர். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பர். தற்போதைய நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் ஆதரவு இருக்கிறது. இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெல்லும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
