நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவாகவே மகனுக்கு ‘ராதாகிருஷ்ணன்’ என பெயர் வைத்தோம்; அந்த ராதாகிருஷ்ணன் வகித்த துணை ஜனாதிபதி பதவியில் அமரப் போகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் என அவரது தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தமது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரான, தற்போதைய மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் தாயார் செய்தியாளர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது, துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் நினைவாகத்தான் மகனுக்கு ராதாகிருஷ்ணன் என பெயர் வைத்தோம்.. இன்று அதே பதவியில் அமருகிறார்.. பிரதமர் மோடிக்கு மிக்க நன்றி என்றார்.
தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக 1952-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு; 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் நாட்டின் ஜனாதிபதியானார் ராதாகிருஷ்ணன். கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 1957-ம் ஆண்டு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.










