ADVERTISEMENT

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா!

Published On:

| By Mathi

Jagdeep Dhankhar Resigns

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக தாம் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். Jagdeep Dhankhar

நாட்டின் துணை ஜனாதிபதியாக 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெகதீப் தன்கர். தமது உடல்நிலையை சுட்டிக்காட்டி மருத்துவ காரணங்களுக்காக இன்று ஜூலை 21-ந் தேதி திடீரென தமது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், மாபெரும் ஜனநாயகத்தில் துணை ஜனாதிபதியாக நான் பெற்ற அனுபவங்கள் விலைமதிப்பற்றவை. இதற்காக மிகவும் நன்றி கூறுகிறேன். மருத்துவக் காரணங்களுக்காக எனது பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்ற, அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் கீழ் உடனே நடைமுறைக்கு வரும் வகையில் துணை ஜனாதிபதி பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.

இந்த பதவிக் காலத்தில் எனக்கு அசைக்க முடியாத ஆதரவு அளித்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் என் நன்றி. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரவணைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் ஜெகதீப் தன்கர்.

ADVERTISEMENT

மத்திய அமைச்சர் முதல் துணை ஜனாதிபதி வரை

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தன்கர், ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1989-91-ல் ஜனதா தளம் கட்சி மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1990-91-ல் பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

ADVERTISEMENT

1991-ல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய ஜெகதீப் தன்கர், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993 முதல் 1998-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் எம்.எல்.ஏ. வாக பதவி வகித்தார்.

2003-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில், ஜெகதீப் தன்கர் இணைந்தார். 2019-ம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் கடுமையான மோதல் போக்கை வெளிப்படுத்தினார் ஜெகதீப் தன்கர்.

2022-ம் ஆண்டு துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி, மார்க்ரெட் ஆல்வாவை நிறுத்தியது. இந்த தேர்தலில் 74.3% வாக்குகளைப் பெற்று வென்றார் ஜெகதீப் தன்கர். இதனைத் தொடர்ந்து நாட்டின் துணை ஜனாதிபதியாக, மாநிலங்களவைத் தலைவராக பதவி வகித்த நிலையில் இன்று தமது பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். மாநிலங்களவையில் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகளின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்.

தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்றத்தை சாடியவர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பை மிகக் கடுமையாக விமர்சித்தவர் ஜெகதீப் தன்கர்.

இதனைத் தொடர்ந்தே ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மீது 14 கேள்விகளை முன்வைத்து விளக்கம் கேட்டிருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜூலை 22-ந் தேதி செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ள நிலையில் ஜெகதீப் தன்கர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share