துணை ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு: 2 மாநில கட்சிகள் திடீர் அறிவிப்பு!

Published On:

| By Mathi

VP Election 2025

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதி தேர்தல் நாளை (செப்டம்பர் 9) நடைபெறும் நிலையில் இத்தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS- பிஆர்எஸ்) மற்றும் ஒடிஷாவின் பிஜூ ஜனதா தளம் (BJD பிஜேடி) ஆகிய கட்சிகள் திடீரென அறிவித்துள்ளன.

17-வது துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் களம் காண்கின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவில் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக கே.சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இது குறித்து பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் கூறுகையில், தெலுங்கனாவில் விவசாயிகளுக்கு உரப் பற்றாக்குறை நிலவுவதால் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் துணை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே மக்கள் நலனைப் புறக்கணிக்கின்றன. துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை- NOTA-வுக்கு வாக்களிக்க வாய்ப்பிருந்தால் அதில் எங்களது கட்சியின் எம்.பிக்கள் வாக்களிப்பர் என்றார்.

பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா கூறுகையில், ஒடிஷாவின் நான்கரை கோடி மக்கள் நலன் கருதி, துணை ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி ஆகியவற்றிடம் இருந்து விலகி இருப்பது என்பதுதான் பிஜூ ஜனதா தளம் கட்சியின் நிலைப்பாடு. ஒடிஷாவின் வளர்ச்சியில் மட்டுமே எங்கள் கட்சி கவனம் செலுத்தும் என்றார்.

ADVERTISEMENT

இதனிடையே டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி? என இந்தியா கூட்டணி எம்.பிக்களுக்கு மாதிரி வாக்குப் பதிவு இன்று நடத்தப்பட்டது. பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்களுக்கும் துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share