நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சில எம்.பிக்கள், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்திருப்பது அந்த கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற எம்.பிக்களின் பலத்தின் அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு 427 வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் 11 எம்.பிக்கள் மற்றும் சில சுயேட்சைகள் ஆதரவளித்தாலும் கூட 449 வாக்குகள்தான் அதிகபட்சம் சிபிஆருக்கு கிடைக்கும் என்பது நிலவரமாக இருந்தது.
அதேபோல இந்தியா கூட்டணியின் வேட்பாளரான சுதர்சன் ரெட்டிக்கு, 315 வாக்குகள் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது.
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. இதில் 98.2% வாக்குகள் பதிவாகின. மொத்தம் 767 எம்.பிக்கள் வாக்களித்தனர். இதில் 15 வாக்குகள் செல்லாதவை. 752 வாக்குகள் செல்லத்தக்கவை.
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளையும் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சில எம்.பிக்கள், சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்ததால் அவருக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன; இந்தியா கூட்டணி கட்சியின் எம்.பிக்களில் சில கறுப்பு ஆடுகள்தான் இப்படி அணி மாறி வாக்களித்துவிட்டதாக குமுறல் எழுந்துள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் தமிழகத்தின் சில எம்.பிக்களே அணி மாறி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்திருக்கலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.









