நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (Vice President C.P. Radhakrishnan), இன்று (செப்டம்பர் 12) பதவியேற்றார். டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகினார். இதனையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி களம் கண்டார். இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் துணை ஜனாதிபதிகள் ஜெகதீப் தன்கர். வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதியின் பதவி காலம் 5 ஆண்டுகள்; மாநிலங்களவையின் தலைவராகவும் துணை ஜனாதிபதி செயல்படுவார்.
ஜெகதீப் தன்கர் பங்கேற்பு
துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின்னர் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல், ஊடகங்களிடம் பேசாமல் இருந்து வந்த ஜெகதீப் தன்கர் இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
