துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்- சந்தேகம் எழுப்பும் வீரமணி!

Published On:

| By Minnambalam Desk

Vice-Chancellor Appointment Case

துணைவேந்தர்கள் நியமன உரிமை தமிழக அரசுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் ஒரு வாரம் கெடுவிதித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பது குறித்து திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சந்தேகம் எழுப்பி உள்ளார். Vice-Chancellor Appointment Case Tamil Nadu Madras High Court

இது குறித்து கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களோ, மேலானவர்களோ அல்ல! சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் காலத்தில் அமைந்துள்ள நான்கு அமர்வுகளில், ஓர் அமர்வில் ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சாமிநாதன், ஜஸ்டிஸ் லட்சுமி நாராயணன் அமர்வு. அந்தக் குறிப்பிட்ட அமர்வு – துணைவேந்தர்கள் நியமன உரிமை, தமிழ்நாடு அரசுக்கு வழங்கும் சட்டத்தை உறுதி செய்து, அரசமைப்புச் சட்டம் 142 இன்படி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய சட்டத்தை எதிர்த்து ஒரு வழக்கைப் பட்டியலிடப்பட்டு, அதை அவசர வழக்காக – விடுமுறை காலத்தின் அமர்வு ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சாமிநாதன் தலைமையில் எடுத்து விசாரிப்பதுடன், தமிழ்நாடு அரசு ஒரு வாரத்திற்குள் பதில் மனு (Counter) போட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதுபோல கூறுவது எந்த நோக்கத்தோடு என்ற கேள்வி எழத்தானே செய்கிறது!

இந்த வழக்கை இந்த அமர்வு விரைவுபடுத்த அதற்கென்ன அவசியம்? அதுவும் விடுமுறை காலத்தில்! உச்சநீதிமன்றத் தீர்ப்பை, உயர்நீதிமன்ற அமர்வு தவறு என்று கூற முடியுமா, சட்டப்படி?

இரண்டு வாரத்திற்குள் ஏதாவது தடையாணை போன்று வழங்கலாமா என்று கருதும் திட்டமோ என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது! ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்வுகள் பலவற்றில் நீதிபதியாகவே பகிரங்கமாகப் பங்கேற்றுப் பேசுவது இவரது ‘பெருமைகளில்’ ஒன்று!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற அமர்வு – அதுவும் விடுமுறைக் கால அமர்வு இப்படி விசாரித்து, ஏதாவது அவசர ஆணை பிறப்பிக்கத் துடிப்பது சட்டப்படி செல்லுமா? என்பதும் கேள்விக் குறி.குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டு 14 கேள்விகளை முன்வைத்துள்ள நிலையில், அதே பிரச்சினையை மய்யப்படுத்தி உள்ள ஒரு வழக்கின் விசாரணைக்கு இப்போது உயர்நீதிமன்றம் மிகுந்த அவசரம் காட்டுவது, சட்டப்படியும், நியாயப்படியும் உகந்ததா?

தமது உயர்நீதிமன்றத் தீர்ப்புகள்பற்றி பொதுவெளியில் விமர்சிக்கப்பட்ட ஒருவர், இப்படி விசாரணைக்கு நிர்ப்பந்தப்படுத்தி, ‘‘ஒரு வாரத்திற்குள்’’ என்று தமிழ்நாடு அரசுக்கு கெடு வைத்ததன் நோக்கம் என்ன இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில், நடுநிலையாளர்களும், ஜனநாயக, அரசமைப்புச் சட்டப் பாதுகாவலர்களும் கூர்ந்து கவனித்தே வருகின்றனர். விரைவில் ‘பூனைக்குட்டி’ மெல்ல மெல்ல வெளியே வரும் என்பது உறுதி! இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share