பிரபு – வெற்றி கூட்டணி ஈர்க்கிறதா?
கிராமத்து வாழ்வைச் சொல்கிற படங்கள் ‘யதார்த்தமான’ திரைக்கதை ட்ரீட்மெண்டை கொண்டிருந்தால் எக்காலத்திலும் ரசிகர்களின் அபிமானத்தைப் பெறும். அதிலும், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்வதாகச் சொல்லப்படுகிற கதைகளுக்கு அந்த வரவேற்பு கூடுதலாக இருக்கும். அப்படியொரு திரைப்படமாக மலர முயற்சித்திருக்கிறது பிரபு, வெற்றி, கிருஷ்ணபிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், தங்கதுரை, இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், கோமல் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில், மகா கந்தன் இயக்கியுள்ள ‘ராஜபுத்திரன்’ திரைப்படம். vetri prabhu rajaputhiran movie review may 30
‘இது ஒரு வழக்கமான கமர்ஷியல் சினிமா’ என்பதைச் சொல்லும்விதமாக ‘ட்ரெய்லர்’ அமைந்தாலும், அதையும் தாண்டிப் புதிதாக ஏதாவது இருக்கும் என்றது.
‘ராஜபுத்திரன்’ திரைப்படம் அப்படித்தான் இருக்கிறதா?

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை!
மகன் மீது பாசத்தை மழையெனக் கொட்டுகிற ஒரு தந்தை. மகனும் அப்படியே. பருவக் கோளாறில் மகன் செய்கிற தவறுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் இருக்கிற தந்தை, அவரை வேலைக்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் இருக்கிறார். காரணம், தான் இதுநாள்வரை செய்துவந்த விவசாயம் குடும்பத்தைக் காக்கும் என்கிற நம்பிக்கையே. மனைவியை இழந்தாலும் தனது மகன், மகளை நன்றாக வளர்த்து வருகிறார் அந்த தந்தை.
குறிப்பிட்ட காலகட்டத்தில் தந்தைக்குச் சிரமம் வைக்கக்கூடாது என்று பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார் மகன். அருகிலுள்ள ஊர்களில் வேலைக்குச் சேர்ந்தால் தந்தைக்குத் தெரிந்து, அதனைச் செய்ய விடாமல் தடுப்பார் என்றெண்ணுகிறார். அதனால், அவருக்குத் தெரியாத நபர்களிடத்தில் வேலை செய்ய முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில், தான் வேலை பார்க்குமிடத்திற்கு அழைத்துச் செல்கிறார் நண்பர் ஒருவர்.
அந்த மகனின் பெயர் பட்டமுத்து (வெற்றி). அவரது தந்தையின் பெயர் செல்லையா (பிரபு).
வெளிநாடுகளில் வேலை பார்க்கிற தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்குச் சில நபர்கள் மூலமாகப் பணம் அனுப்புகின்றனர். அதனைக் கொண்டுபோய் கொடுப்பதுதான் வேலை. அதனைச் செய்யத் தொடங்குகிறார் பட்டன்.
இங்கிருக்கும் கருப்பு பணத்தைக் கணக்கில் காட்டுகிற ‘தில்லாலங்கடி’ இதன் பின்னணியில் இருக்கிறது. இதன் மூலமாக, அவர்கள் கோடி கோடியாகச் சம்பாதிக்கின்றனர். அதிலொருவர் லிங்கா (கோமல் குமார்). ராமநாதபுரத்தில் அவர் தனது சாம்ராஜ்யத்தைக் கொண்டிருக்கிறார்.
சிண்டிகேட்டில் லிங்காவுக்கு இருக்கிற மரியாதையைக் கண்டு குமுறுகிறார் அருகிலுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ் (ஆர்.வி.உதயகுமார்). லிங்காவைக் கவிழ்க்க, அவருடனேயே பல ஆண்டுகளாக இருந்துவரும் மீசையை (லிவிங்ஸ்டன்) பிடிக்கிறார். சில சதிச்செயல்களை அரங்கேற்றத் தொடங்குகிறார்.
அதிகளவில் பணத்தை எடுத்துச் செல்கிற நபர்களிடம் இருந்து சிலர் அதனைப் பறிக்கின்றனர். அதனால், அந்த நபர்களைக் கொலை செய்கிறார் மீசை.
இந்த நிலையில், குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பிறகு லிங்காவின் அபிமானத்தைப் பெறுகிறார் பட்டன். அது மீசையின் கண்களை உறுத்துகிறது.
அதற்கடுத்த சில நாட்களில், தான் கொண்டு செல்கிற பணத்தைப் பறிகொடுக்கிறார் பட்டன். அது தெரிய வந்ததும், அவரைக் கொல்ல முயற்சிக்கிறார் மீசை.
அதேநேரத்தில், லிங்காவிடம் பட்டன் பணியாற்றுவது செல்லையாவுக்குத் தெரிகிறது. அவரும் அந்த இடத்திற்கு வருகிறார்.
அதன்பிறகு என்னவானது என்பதைச் சொல்கிறது ‘ராஜபுத்திரன்’.
தொண்ணூறுகளில் வெளிநாடுகளில் பணியாற்றுகிற தொழிலாளர்களின் பணத்தை இங்கிருக்கும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதாகச் சொல்லி, சிலர் பணப்பரிவர்த்தனைகளைச் சட்டவிரோதமாக மேற்கொள்வதே இந்தக் கதையின் சிறப்பம்சம். அதுவே இப்படத்தை நாம் உற்றுநோக்கவும் ரசிக்கவும் காரணமாக இருக்கிறது.

வித்தியாசமான ‘வில்லன்’ பின்னணி!
8 தோட்டாக்கள், ஜீவி படங்களின் வழியே கவனம் ஈர்த்த வெற்றி, இதில் நாயகன். கிராமத்து இளைஞராகத் திரையில் மிளிர்கிறார்.
அவரது தந்தையாக வரும் பிரபு, வழக்கம்போலத் தனது நடிப்பால் அசத்துகிறார். அதேநேரத்தில், அவரது புகழ் வெளிச்சம் ’யதார்த்தம்’ தெறிக்கிற திரைக்கதை ட்ரீட்மெண்டை மங்கச் செய்திருக்கிறது.
இப்படமே பிரபு – வெற்றி கூட்டணியை நம்பி அமைக்கப்பட்டிருக்கிறது. அது சிறப்பாகத் திரையில் வெளிப்பட்டிருந்தாலும், தனித்துவமாகச் சொல்லும்படி எந்த திரையனுபவத்தையும் வழங்கவில்லை.
நாயகி கிருஷ்ணபிரியா நடித்த பாத்திரம் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. அவர் என்ன வேலை செய்கிறார் என்பது திரைக்கதையில் தெளிவுறச் சொல்லப்படாவிட்டாலும், அவரது இருப்பு ரசிக்கும்படியாக உள்ளது.
வில்லனாக நடித்திருக்கும் கன்னட நடிகர் கோமல் குமார், தமிழ் திரை நட்சத்திரங்களான ரஜினி முதல் பலரை ‘இமிடேட்’ செய்திருக்கிறார்.
இது போக மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர். முந்தைய இருவரும் திரைக்கதையில் ஏன், எப்போது வருகின்றனர் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி, கலை இயக்குனர் அய்யப்பன் இருவரும் தொண்ணூறுகளில் இருந்த தமிழ்நாட்டு கிராமங்களின் வாழ்வை இப்போதைய சினிமா ட்ரெண்டுக்கு ஏற்ப அழகுறக் காட்ட முயற்சித்திருக்கின்றனர். அதற்கு விஎஃப்எக்ஸும் உதவியிருக்கிறது.
இசையமைப்பாளர் நஃபால் ராஜாவின் பின்னணி இசை குறிப்பிட்ட காட்சிகளில் நன்றாக இருக்கிறது. பாடல்கள் ஓகே ரகம்.
மகாகந்தன் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
கதையில் வருகிற வில்லனின் பின்னணி தான் இப்படத்தை ‘வழக்கமான கிராமத்து படம்’ என்று சொல்லவிடாமல் தடுக்கிறது. அது குறித்த தெளிவான, கூடுதலான விளக்கம் படத்தில் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மகளை விட மகன் மீது பாசம் வைக்கிற தந்தையை நியாயப்படுத்துகிற விதமான காட்சிகள் திரைக்கதையில் இல்லை. போலவே, கிளைமேக்ஸ் அதிர்ச்சி தருகிற விதத்தில் இருக்கும் என்பதை அதற்கு முன்னதாக வரும் காட்சிகளே சொல்லிவிடுகின்றன.
அந்த காட்சிகளில் மட்டும் நிறையவே அவசரம் காட்டியிருக்கிறார் இயக்குனர். போலவே, அதுவரையிலான திரைக்கதை நகர்வைச் சிறுமைப்படுத்துகிற வகையில் ‘உம்மா’ எனும் பாடலையும் சேர்த்திருக்கிறார்.
இன்னும் சில குறைகள் இதிலுண்டு. அவற்றைச் சரி செய்திருந்தால், ‘ராஜபுத்திரன்’ தொட்டிருக்கும் உயரம் வேறாக இருந்திருக்கும்.
இப்போது, ‘அந்த குறைகளை மீறி, கணிசமானோர் இதனை ரசிப்பார்கள்’ என்கிற நிலையில் இருக்கிறது. அது நிகழ, அவர்களை தியேட்டருக்கு வரவழைத்தாக வேண்டுமே? அதற்கான காரணிகள் ‘ராஜபுத்திரன்’னில் குறைவு என்பதே உண்மை.
