சட்லஜ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட இயக்குநர் வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இன்று (பிப்ரவரி 13) மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்படும் என்று மனித நேய அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், இயக்குநருமான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
கார் ஓட்டுநர் உடல் சடலமாகவும், உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை.
கடந்த 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 5 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் நேற்று மீட்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடல் இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு,
தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக மனித நேய அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் “சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய கல்வி அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமியின் மகன் மனிதநேய அறக்கட்டளையின் இயக்குனர்,
வெற்றி துரைசாமி பிப்ரவரி 4ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய, மாநில அரசின் தொடர் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் சட்லஜ் நதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது பூத உடல் எண் 28, முதல் பிரதான சாலை, சி. ஐ. டி. நகர், நந்தனம், சென்னை என்ற முகவரியில் இன்று பிப்ரவரி 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு,
இறுதிச்சடங்கு மாலை 6 மணியளவில் கண்ணம்மாபேட்டை மயானபூமியில் தகனம் செய்யப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம்: என்ன காரணம்?
பகலில் நிருபர்; இரவில் ஹமாஸ் பயங்கரவாதி – அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவம்!