கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு: முழு விவரம்!

Published On:

| By admin

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய ஏழு இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2021-22ஆம் ஆண்டுக்கான இளநிலை (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் மற்றும் பிடெக்) பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. அதன்படி, 24ஆம் தேதி காலை 9 மணிக்கு பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் – கலையியல் பிரிவு மற்றும் பிடெக் பட்டப்படிப்புகளில், 7.5 சதவிகிதம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
25ஆம் தேதி பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்), பிடெக் (உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம்) பட்டப்படிப்புகளில் சிறப்பு பிரிவு – விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவபடை வீரர்களின் வாரிசுளுக்கு நடைபெற உள்ளது.
26ஆம்தேதி காலை 11.30 மணிக்கு பிவிஎஸ்சி, ஏஹெச் (இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் – தொழிற்கல்வி பிரிவு) பட்டப்படிப்புகளில் 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான (தொழிற்கல்வி பிரிவு) கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் நடக்க உள்ளது.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 28ஆம்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 16ஆம்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்விக் கட்டணம் செலுத்துவது மட்டும் நேரடியாக நடைபெறும், அதுதவிர மற்ற நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடக்கிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share