நூற்றாண்டு கண்ட இந்தியாவின் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணுவின் உடல் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அவர் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
100 வயதைக் கடந்த முதுபெரும் தலைவரான நல்லகண்ணு, கடந்த 22-ந் தேதி வீட்டில் தவறி விழுந்தார். இதனால் தலையிலும் கை விரலிலும் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நல்லகண்ணு. அங்கு, நல்லகண்ணு தலையில் காயம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் கடந்த 24-ந் தேதி உணவு சாப்பிடும் போது நல்லகண்ணுவுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதிக்கப்பட்டார். அங்கு நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் உணவுக் குழாயில் சிக்கி இருந்த துகள்கள் அகற்றப்பட்டன. இதனால் நல்லகண்ணு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் கடந்த 26-ந் தேதி நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. மேலும் தோழர்களை அடையாளம் காணும் அளவுக்கு அவரது உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால் நேற்று முன்தினம் இரவு திடீரென மீண்டும் சுவாச பிரச்சனை ஏற்பட்டது. இதனால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தோழர்கள் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில், “உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் – அமைச்சர்
மா.சுப்பிரமணியனிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், “தோழர் நல்லகண்ணு மீண்டு வருவார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்” என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், உ.வாசுகி ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று முத்தரசன் மற்றும் நல்லகண்ணு மகள் டாக்டர் ஆண்டாள் ஆகியோரிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
