பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பாலிவுட் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளளது.
இந்தி திரை உலகில் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்தவர் தர்மேந்திரா (வயது 89). இவர் இதய நோய் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதன் காரணமாக மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர். அவர் நலமாக இருப்பதாக மனைவியும், பாஜக எம்பியுமான ஹேமமாலினி மற்றும் ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதி செய்தனர்.
இதையடுத்து தர்மேந்திராவிற்கு வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா உடல் நலக்குறைவால் மறைந்துள்ளார்.
தர்மேந்திரா உயிரிழந்த நிலையில் மும்பை காவல்துறையினர் இறுதி சடங்குகளுக்கான பணியை துவங்கி உள்ளனர். அவரது மரணத்தை பாலிவிட் இயக்குநர் கரண்ஜோகர் உறுதி செய்துள்ளார்.
மும்பையில் திரைப்பிரபலங்கள் தர்மேந்திரா உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யார் இந்த தர்மேந்திரா
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் தர்மேந்திரா. இவர் 1960-ம் ஆண்டு தில் பீ தேரா ஹம் பீ தேரே திரைப்படம் மூலம் திரை உலகில் அறிமுகமானார். ‘ஷோலே’, ‘சீதா அவுர் கீதா’, ‘தும் ஹசீன் மெயின் ஜவான்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர்.
இவர் தனது 19ம் வயதில் முதல் திருமணத்தை செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சன்னி தியோல், பாபி தியோல் என இரண்டு மகன்களும் விஜீதா, அஜிதா என இரண்டு மகள்களும் உள்ளனர். நடிகை ஹேமாலினியை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஈஷா தியோல் மற்றம் அஹானா தியோல் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த 1997ல் பிலிம்பேர் சாதனையாளர் விருதும், 2012ம் ஆண்டில் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருதும் பெற்றார் தர்மேந்திரா.
2018 வரை திரைப்படங்களில் நடித்தவர் 2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
