கோவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டது. இந்தப் பணிகள் ஒரு மாத காலம் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்
தமிழகத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை இன்று தொடங்கி வரும் ஜனவரி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் கடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் சோதனை நடத்தப்படுகின்றது. முதல் கட்ட சோதனையானது அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (டிசம்பர் 11) துவங்கியது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய வளாகம் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பானவர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு வாக்கு பதிவு இயந்திரமாக சோதனை செய்தனர்.
சோதனைக்கு பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான பவன் குமார் கிரியப்பனவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்து வருகிறோம். கோவை மாவட்டதில் 19,520 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் கோவை மாவட்டத்திற்கு 13 மென் பொறியாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களது மேற்பார்வையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் இந்த பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளது. ஒரு மாத காலத்திற்கு இந்த பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இதில் முழுமையாக அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் நல்ல முறையில் உள்ளதா? குறைபாடுகள் இருக்கிறதா என்பது சரிபார்க்கப்பட்டு , பழுதான இயந்திரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்து மாற்று இயந்திரங்கள் வாங்கப்படும் என்றும் கூறினார்.
