அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்கள் உள்ளிட்ட கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ உள்ளிட்ட கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின் போது, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசும், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. ஆனால் இந்த வரைவு நெறிமுறைகளுக்கு அதிமுக, தவெக எதிர்ப்பு தெரிவித்தன. இந்த இரு கட்சிகளும் உயர்நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்தன.
அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவா, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
