சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என்று மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (மார்ச் 23) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கொரோனா ஊரடங்கு காலத்தில் கடையைத் தாமதமாக மூடியதாகக் கூறி, சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது அவர்கள் இருவர் மீதும் நிகழ்த்தப்பட்ட கொடூரமான தாக்குதலால், அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 10 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக 2,207 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.இதில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மாலை 4 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 9 பேருக்கும் வரும் மார்ச் 30-ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
