செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி, மகன் கெளதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை!

Published On:

| By Kavi

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுவித்து இன்று தீர்ப்பளித்தது.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில், கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். 

ADVERTISEMENT

அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் இருந்த செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி  செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக பொன்முடி மீது புகார் எழுந்தது. 

இதைத்தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய எட்டு பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

ADVERTISEMENT

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே உடல்நலக்குறைவு காரணமாக லோகநாதன் உயிரிழந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் அரசு சார்பில் சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. 57 சாட்சிகளில் 33 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். 

கடந்த மார்ச் 2ஆம் தேதி விசாரணை நடைபெற்ற போது, பொன்முடி உள்ளிட்டோரின் சார்பில் வழக்கறிஞர்களும் அரசு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். 

இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து நீதிபதி மணிமொழி வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணையை ஏப்ரல் 2ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். 

தீர்ப்பு வருவதையொட்டி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்ட ஏழு பேர் இன்று விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.அப் போது நீதிபதி பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினார். 

தொடர்ந்து 3 மணிக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்த வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என உத்தரவிட்டார்.

அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 57 பேரில் 33 பேர் அரசுக்கு பாதமாக சாட்சி அளித்துள்ளதாலும், போதிய அளவு ஆவணங்கள் தாக்கல் செய்யபடாததாலும் பொன்முடி உட்பட 7 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share