’வேங்கைவயல்.. 2 ஆண்டுகள் ஆகியும் ஒருவரை கூட கைது செய்யாதது ஏன்?’ : உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By christopher

'Vengaiyal.. Why has not a single person been arrested even after 2 years?': HC

”வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டிக்குள் மனித மலம் கிடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒரு குற்றவாளியை கூட ஏன் கைது செய்யவில்லை” என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 8) கேள்வி எழுப்பியுள்ளது.

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வெள்ளனூர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டு காவல்துறை விசாரணை செய்து வந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

எனினும் இந்த வழக்கில் இதுவரை ஒரு குற்றவாளிகள் கூட கைது செய்யப்படாதது தமிழக அரசியல் களத்தில் தொடர் விவாதமாக இருந்து வருகிறது.

ஒருநபர் விசாரணை ஆணையம்!

இதற்கிடையே வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும்! 

தொடந்து கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும் என காவல்துறை தெரிவித்திருப்பதாக கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 3ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதன்படி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணி, “வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாரும் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ஆதாரங்கள் கிடைத்ததும் கைது செய்வோம்!

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “இதுவரை 389 நபர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய  3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புலன் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும் கைது செய்வோம்” என்று தெரிவித்தார்.

ஒரு குற்றவாளியை கூட கைது செய்யாதது ஏன்?

அப்போது குறுக்கிட்ட பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், “வேங்கைவயல் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒரு குற்றவாளியை கூட தமிழக காவல்துறை கைது செய்யாதது ஏன்? காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? இதில் முழுமையான விவரங்கள் தேவை. எனவே மேலும் 2 வாரம் அவகாசம் தருகிறேன். அதற்குள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share