வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரிய பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில், “வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூவர் மீதும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பேசுபொருளானது. அதிமுக, பாஜக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தநிலையில், “வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களே குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். எனவே, அந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது” என்று புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.