வைஃபை ஆன் செய்ததும் கோவையில் வரும் மார்ச் 10 ஆம் தேதி கொடிசியாவில் நடக்கும் வேலுமணி மகன் திருமண வரவேற்பு ஏற்பாடுகள் பற்றிய சில செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. Velumani Vs Edappadi… Vijay play
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மார்ச் 3 ஆம் தேதி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மகன் விகாஸ்- தீக்ஷனா ஆகியோரின் திருமணம் கோவை ஈச்சநாரி பகுதியிலுள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஆனால் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை, மத்திய அமைச்சர் முருகன், குஷ்பு ஆகியோர் ஒன்றாக வந்திருந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதுவும் அண்ணாமலை வரும்போது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விசுவநாதன் போன்றோர் அண்ணாமலையின் கையைப் பிடித்து வரவேற்று மகிழ்ந்தனர். வேலுமணியும் அண்ணாமலையை இன்முகத்தோடு வரவேற்றார். வேலுமணியின் மகனும், மணப்பெண்ணும் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதமாகின.
கொங்கு இரட்டையர்கள் போலவே இருக்கும் எடப்பாடியும் வேலுமணியும் ஏன் இப்படி ஆகிவிட்டார்கள்? வேலுமணியின் திருமணத்துக்கு எடப்பாடி அல்லவா முதல் ஆளாக வந்திருக்க வேண்டும்? மற்ற கட்சியினரெல்லாம் வந்து வாழ்த்தும்போது தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய எடப்பாடி ஏன் வரவில்லை? என்றெல்லாம் கொங்கு அதிமுகவில் தொடங்கி தமிழ்நாட்டின் அனைத்து பகுதி அதிமுகவிலும் விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.
திருமணத்துக்கு எடப்பாடி வராதது ஏன்?

கொங்கு அதிமுகவில் விசாரித்தபோது, ‘மார்ச் 3 ஆம் தேதி நடந்த தனது மகன் கல்யாணத்துக்காக சுமார் ஆறு மாத காலத்துக்கும் மேலாக பலருக்கும் பத்திரிகை வைத்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதமே சேலத்திலுள்ள எடப்பாடியின் வீட்டுக்கு சென்ற வேலுமணி தனது மகன் திருமண பத்திரிகையை வழங்கினார். ‘நீங்கதான் வந்து நடத்திக் கொடுக்கோணும்’ என்று வேண்டுகோள் வைத்தார். அதற்கு எடப்பாடியும் சம்மதித்தார்.
வேலுமணி மகன் திருமணம் மார்ச் 3 ஆம் தேதி, கட்சி வரவேற்பு மார்ச் 10 ஆம் தேதி என எடப்பாடியின் டைரியில் குறிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் கடந்த ஒரு மாதத்துக்குள் தேனியில் அதிமுக பொதுக்கூட்டத்தை மார்ச் 2 ஆம் தேதி என அறிவிக்கிறார் எடப்பாடி. அப்படியென்றால் தேனியில் இருந்து நேராக கோவை வந்துவிடுவார், மூன்றரை மணி நேர டிராவல்தானே என்று வேலுமணி தரப்பினர் நினைத்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிந்து நேராக சேலம் திரும்பிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில்தான் எடப்பாடி தாலியெடுத்துக் கொடுக்க வேண்டிய திருமணம்… கொங்கு மண்டலத்தின் பிரபல கல்வியாளரான மூத்தவர் கிருஷ்ணராஜ் வானவராயர் தாலியெடுத்துக் கொடுக்க இனிதே அரங்கேறியது.
எடப்பாடி வராதது ஒரு செய்தியென்றால், அண்ணாமலை உள்ளிட்டோர் வந்தது இன்னொரு செய்தியானது. Velumani Vs Edappadi… Vijay play
எடப்பாடி-வேலுமணி என்ன நெருடல்?

வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே ஏதோ ஒரு நெருடல் சில மாதங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. கட்சிப் பதவிகளுக்காக வேலுமணி சிபாரிசு செய்பவர்களுக்கு ஓரிரு நாட்களிலேயே நியமன அறிவிப்பை வெளியிட்டுவிடுவார் எடப்பாடி. ஆனால் சில மாதங்களாகவே வேலுமணியின் சிபாரிசுகளை கண்டுகொள்வதே இல்லை எடப்பாடி. மேலும், வேலுமணியின் சமீபத்திய டெல்லி விசிட், ஈஷாவில் அமித் ஷாவுடனான தனிப்பட்ட சந்திப்பு ஆகியவையும் எடப்பாடிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கின்றன’ என்கிறார்கள்.
திருமணத்துக்கு முதல் நாள் தேனி போனது ஏன்?

அதேநேரம் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் வட்டாரங்களோ வேறு மாதிரி சொல்கிறார்கள்.
’வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை. ஓபிஎஸ் சமீப நாட்களாக குறிப்பாக உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் தெம்பாக உலாவருகிறார் என்ற நிலையில், அவரது சொந்த மாவட்டத்தில் பொதுக்கூட்டம் போட்டு அவரது மிச்சமிருக்கும் இமேஜையும் காலி செய்ய வேண்டும் என்றுதான் திடீரென தேனி பயணம் மேற்கொண்டார் எடப்பாடி.
அதுமட்டுமல்ல… மார்ச் 3 ஆம் தேதி திருமணத்துக்கு அண்ணாமலை, தமிழிசை, முருகன் ஆகியோர் ஒன்றாக வருகிறார்கள் என்ற தகவல் எடப்பாடிக்கு முதல் நாள் இரவே கிடைத்துவிட்டது. அவர்கள் அங்கே வரும் நிலையில், தானும் அங்கே இருந்தால் இதை வைத்தே அதிமுக-பாஜக கூட்டணி என்று கதை கட்டிவிடுவார்கள் என்பதற்காகத்தான் மார்ச் 10 கட்சி வரவேற்பு நிகழ்ச்சிக்கே வருகிறேன் என்று வேலுமணியிடமே கூறிவிட்டார் எடப்பாடி. மற்றபடி இதில் வேறு ஒன்றுமில்லை’ என்கிறார்கள்.
விஜய்யின் வில்லங்க விளையாட்டு!
இருவருக்கும் இடையில் நடப்பவற்றை அறிந்த கொங்கு அதிமுக புள்ளிகள் சிலரோ, ‘எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே வில்லங்கமான விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பவர் விஜய்தான்.
விஜய் தரப்போடு எடப்பாடியின் மகன் மிதுன் அதிகாரபூர்வமற்ற பேச்சுகளை சில மாதங்களாகவே மேற்கொண்டிருக்கிறார். இது செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட யாருக்கும் பிடிக்கவில்லை.
இரட்டைத் தலைமையில் பிரச்சினை குழப்பம் என்றுதான் ஒற்றைத் தலைமையாக எடப்பாடியை கொண்டுவந்தோம். ஆனால் இவரோ அம்மா ரேஞ்சுக்கு தன்னை சுற்றி இரும்புத் திரை போட்டுக் கொண்டு சில விஷயங்களை செய்து வருகிறார்.
குறிப்பாக விஜய்யோடு அதிமுக இறங்கி போய் பேச வேண்டிய அவசியம் என்ன? அதுவும் விஜய் தரப்பில் பாதிக்குப் பாதி இடம் கேட்கிறார்கள். அதிகபட்சமாக விஜய்க்கு 50 இடங்கள் கொடுத்தால் கூட…அது அப்படியே திமுகவுக்கு வாரிக் கொடுக்கும் இடங்களாக மாறிவிடும். அரசியலுக்கு மிகப் புதிய விஜய்க்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா, கட்சி கட்டமைப்பு இருக்கிறதா, பூத் ஏஜெண்ட்டுகள் இருக்கிறார்களா?

இந்நிலையில் விஜய் இப்படி அதிமுகவிடம் கறார் காட்டுவதற்குக் காரணம்…அதிமுக பிரிந்து கிடப்பதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தோற்றம்தான். அதனால் ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை எல்லாம் ஒன்றாக்கி அதிமுகவை ஒற்றுமையான கட்சியாக்கி… 2021 என்.டி.ஏ.வை மீண்டும் கட்டியெழுப்பலாம். 2021 இல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரு சில சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம். எனவே வலிமையான கட்சியையும், வலிமையான கூட்டணியையும் வைத்திருந்தால் விஜய் எல்லாம் நம்மை ஏன் சீண்டிப் பார்க்கிறார்?’ என வேலுமணி வெளிப்படையாகவே தனது ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார்.’ இதெல்லாம் அறிந்துதான் எடப்பாடி சற்று நெருடலோடு இருக்கிறார். Velumani Vs Edappadi… Vijay play
ஆனபோதும் வேலுமணி தரப்பினரின் அழுத்தத்துக்கு சாதகமான பதில் தரும் வகையில்தான் மார்ச் 4 ஆம் தேதி சேலத்தில், ‘திமுகதான் எங்கள் ஒரே எதிரி’ என்று பேட்டியளித்திருக்கிறார். மார்ச் 10 ஆம் தேதி எடப்பாடி கோவை கொடிசியாவுக்கு வேலுமணி மகன் வரவேற்புக்கு வருவார். அதன் பின்னர் இதற்கெல்லாம் ஒரு முடிவு காணப்படும் என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப். Velumani Vs Edappadi… Vijay play