அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 11) சென்னையில் அக்கட்சித் தலைமையகத்தில் நடந்தது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்தார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
கூட்டத்துக்குப் பிறகு அவர், “ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து பண பலம் படைபலம் மூலம் கடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை போலவே இப்போதும் திமுகவினர் மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால் அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்கிறது’ என்று அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, முன்னாள் அமைச்சரும் முக்கிய நிர்வாகியுமான எஸ்.பி.வேலுமணி இந்த கூட்டத்துக்கு முன்பே எடப்பாடியிடம் ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
“நாம் ஒதுங்கிப் போவதால் நம்மை பயந்து போய் ஒதுங்குவதாக அப்போதும் திமுகவினர் விமர்சனம் செய்தார்கள். இப்போதும் செய்வார்கள். பிரதான எதிர்க்கட்சியான நாம், அதுவும் நமக்கு சாதகமான கொங்கு பகுதியில் நடக்கும் இடைத் தேர்தலை தவிர்க்க கூடாது.
நாம் போட்டியிட்டால்தான் பொது தேர்தலுக்கு முன் அதிமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உற்சாகம் பிறக்கும்,. எல்லா மாவட்டங்களில் இருந்தும் வந்து ஈரோடு கிழக்கில் வேலை செய்யும்போது கட்சி உணர்வு அதிகரிக்கும்.
ஈரோடு எம்பி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஆற்றல் அசோக் குமார், தான் இடைத் தேர்தலில் நிற்க தயாராக இருப்பதாக கூறுகிறார். அதேநேரம் 2026 தேர்தலிலும் ஈரோடு கிழக்கு தொகுதியை தனக்கே தர வேண்டும் என்ற உறுதிமொழியை எதிர்பார்க்கிறார். இடைத் தேர்தல் செலவை எல்லாம் அவரே பார்த்துக் கொள்வார். அதனால் ஈரோட்டில் திமுகவோடு மோதிப் பார்த்துவிடுவோம்’ என்று கூறியுள்ளார் வேலுமணி.
இதையே மாசெக்கள் கூட்டத்திலும் எடப்பாடியிடம் கூறியுள்ளார். கூட்டத்துக்கு முன்பே ஆற்றல் அசோக் குமாரும் அதிமுக அலுவலகத்துக்கு வந்திருக்கிறார்.
ஆனால் எடப்பாடியோ இதற்கு வேறு விதமான விளக்கத்தை அளித்துள்ளார்.
“விக்கிரவாண்டி இடைத் தேர்தலை நாம் புறக்கணிச்சோம். அப்போது தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று சொல்லிதான் புறக்கணிச்சோம். அப்படி இருக்க இப்போது ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் நாம் போட்டியிட்டால்… தேர்தல் நியாயமாக நடக்கிறது என்று நாமே சான்றளிப்பதாக ஆகிவிடாதா? இதை திமுகவினர் பேச மாட்டார்களா?

மேலும், இடைத் தேர்தலில் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கப் போகிறது. அதிமுக காலத்திலும் இதுதான் நடந்தது. போன முறை காங்கிரஸ் நின்றபோதே அத்தனை கோடிகளை அள்ளி இறைத்தார்கள். இப்போது திமுகவே நேரடியாக நிற்கும் நிலையில் அதைவிட பல மடங்கு செலவு செய்வார்கள். இதையெல்லாம் தாண்டி நாம் மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும்.
இப்படி நடக்கும் தேர்தல் முடிவில் நாம் வாங்கும் வாக்குகள் கடந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை விட ஒருவேளை குறைந்துவிட்டது என்றால்… அதை வைத்தே அடுத்த அரசியலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். 2026 இல் நாம் அமைக்கும் கூட்டணிக்கும் அது பாதகமாகிவிடும். எனவே உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்காமல் யோசித்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்” என்று எடப்பாடி சொல்ல மாசெக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
இதன் பிறகே புறக்கணிப்பு அறிவிப்பு வெளியானது.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கம் பேக் இந்தியன் தாத்தா… அப்டேட் குமாரு
மத்திய அமைச்சர் சொன்ன பொய்… அமைச்சர் சிவசங்கர் காட்டும் ஆதாரம்!