வேலுமணி ரெய்டுக்கு எதிர்ப்பு: 7 எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்கு

Published On:

| By Minnambalam

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட,

7 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்பட 390 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இது பற்றி அறிந்ததும் கோவையில் அதிமுகவினர் எஸ்.பி.வேலுமணி வீட்டு கேட்டின் முன்பு சாலையில் அமர்ந்துகொண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதற்கிடையே கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், செ.தாமோதரன், சூலூர் வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ், கே.ஆர்.ஜெயராம் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

அப்போது பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீஸார் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அங்கு திரண்டு இருந்த எம்.எல்.ஏக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

ADVERTISEMENT

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸார் அதிமுக எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 390 பேரை கைது செய்து,

தனியார் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை இரவு விடுவித்தனர். 

இந்த நிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்பட 7 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 390 பேர் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் என்ற பிரிவின் கீழ் குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

-ராஜ்

மின்கட்டணம்: கே.பாலகிருஷ்ணனுக்கு செந்தில் பாலாஜி பதில்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share