வைஃபை ஆன் செய்ததும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர் சந்திப்பு நடத்திய காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. Velmurugan to PMK Stalin decision
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“மார்ச் 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக கூட்டணியில் இருக்கும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உணர்ச்சிவசப்பட்டு சில விஷயங்களை பேசினார்.
தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர் வேலை வாய்ப்பு பெறுவது பற்றிய முந்தைய ஆட்சியின் சட்டத்தை எதிர்த்து தான் போராடியதை விவரித்தார் வேல்முருகன். அப்போது வேல்முருகனுக்கு சில உறுப்பினர்கள் எழுந்து பதில் சொல்ல, தானும் அவர்களுக்கு பதில் சொல்ல வாய்ப்பு கேட்டார் வேல்முருகன். அவருக்கு அனுமதி மறுக்கப்படவே சபாநாயகர் முன்பு சென்று கோஷமிட்டார்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு சில வார்த்தைகளை பயன்படுத்தி பதிலளிக்க வேல்முருகன் டென்ஷன் ஆனார். பிறகு முதலமைச்சரும் அதே வார்த்தையை பயன்படுத்த அவையில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். சபாநாயகரிடம் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினார் முதல்வர்.

வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
மேலும் திமுக கூட்டணியில் இருந்து தன்னை வெளியேற்றினால் கூட கவலை இல்லை என்றும் தன்னுடைய பாணியில் அரசியல் செய்யப் போவதாகவும் வேல்முருகன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 21) சட்டமன்ற கூட்டத்திற்கு வேல்முருகன் வரவில்லை.
இதற்கிடையில் வேல்முருகனுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையில் சமீப காலமாக ஒரு இணக்கம் ஏற்பட்டு வருவதாக திமுக தரப்புக்கு தகவல்கள் சென்று கொண்டிருந்தன.
தனது சமீபத்திய சட்டமன்ற பேச்சுக்களில் கூட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பற்றி எல்லாம் குறிப்பிட்டுள்ளார் வேல்முருகன். மேலும் கடந்த மார்ச் 12ஆம் தேதி பாமக வழக்கமாக வெளியிடும் நிழல் பட்ஜெட், நிழல் வேளாண் பட்ஜெட் புத்தகங்களை வேல்முருகனுக்கு கொடுத்து அனுப்பி உள்ளார் ராமதாஸ்.

அந்த புத்தகங்களை பாமகவின் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் தலைமையில் சென்னை மாவட்ட பாமக நிர்வாகிகள் வேல்முருகனை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், ‘ நிழல் நிதிநிலை அறிக்கைகளை என்னை நேரில் சந்தித்து வழங்க அறிவுறுத்திய மருத்துவர் ஐயா மற்றும் மருத்துவர் சின்ன ஐயா ஆகியோருக்கு நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார் வேல்முருகன். Velmurugan to PMK Stalin decision
எப்படி திமுகவிலிருந்து பிரிந்தாலும் மதிமுக இப்போது திமுகவுக்கு உறுதுணையாக இருக்கிறதோ… அதேபோல பாமகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தினாலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாமகவோடு இணக்கமாக இருக்கிற ஒரு சூழல் பற்றி ஆலோசிக்கப்படுகிறது என்றும் முதலமைச்சருக்கே தகவல்கள் சென்றிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்துக்கும் வேல்முருகன் வரவில்லை என்ற சூழலில்… ‘அவரும் கோபப்பட்டார்… நாமளும் கோபப்பட்டோம். சரி அவர்கிட்ட என்னன்னு கூப்பிட்டு பேசுங்க..’ என்று திமுகவின் கூட்டணி கட்சிகளை கையாளுகிற பொறுப்பில் இருக்கும் அமைச்சர் எ.வ.வேலுவிடம் இன்று அறிவுறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். Velmurugan to PMK Stalin decision
இந்த அடிப்படையில் இன்று வேல்முருகனிடம் அமைச்சர் வேலு பேசியிருக்கிறார் என திமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

திமுக கூட்டணியில் ஒரு சிறு நெருடலும் வந்து விடக்கூடாது என முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார், இந்த அடிப்படையிலேயே கூட்டணி கட்சிகள் இடையே விவாதங்கள் இருந்தாலும் விரிசல் ஆகக்கூடாது என்ற பார்வையில் செயல்படுகிறார் முதல்வர் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.