“மனவேதனைக்கு மருந்திட்ட ஸ்டாலின்” : வேல்முருகன் பேட்டி!

Published On:

| By Kavi

 velmurugan speak about meeting

முதல்வர் ஸ்டாலின் என்னை அழைத்து பேசியது, மனவேதனைக்கு மருந்திட்டது போல் இருந்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். velmurugan speak about meeting with cm stalin

தமிழக சட்டப்பேரவையில்  சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே சென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் முழக்கம் எழுப்பியதும், அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் சொன்னதும், முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து வேல்முருகன் வரம்பு மீறுவதாக கூறியதும்  திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், நேற்று  சட்டமன்றத்தில் இருக்கும் முதலமைச்சர் அறைக்கு சென்ற வேல்முருகன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். 

முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேல்முருகன் தன்னுடைய தரப்பு விளக்கங்களை கொடுத்தார். முதலமைச்சரும் சபையில் அன்று நடந்தது பற்றி குறிப்பிட்டு, ‘கோவத்த குறைச்சுக்கோங்க. உங்க மேல எனக்கு உரிமை இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் தவாக செயற்குழு கூட்டம்: முதல்வரை சந்தித்த வேல்முருகன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

இந்நிலையில் இன்று (மார்ச் 25) சட்டப்பேரவையில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வேல்முருகன்,  “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுப்போம் என்று ஆணவத்தோடு அறிவித்திருக்கிறார் ஒன்றிய அமைச்சர். அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தேன். இதற்கு முதல்வர் பதிலளிக்கும் போது விரைவில் தமிழ்நாடு மீண்டும் மாநில சுயாட்சியை கோரும் வகையில் ஒரு முடிவை எடுக்கும் என்ற பொருள்பட சூசகமாக சில செய்திகளை தெரிவித்திருக்கிறார். 

இன்றைக்கு தமிழகத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்களில், விமான நிலையங்களில் அலுவல் மொழியாக தமிழ் இல்லை. இலங்கை மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது.  நம்முடைய  மாநிலத்தில் வங்கி சலான்களில் தமிழ் இல்லை. ஏடிஎம்-ல் இருந்த தமிழ் தூக்கப்பட்டிருக்கிறது.  எழுத்துத் தேர்வுகளில் தமிழ் தூக்கப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் தான் உள்ளன. 

கடந்த வாரம் சட்டப்பேரவையில் ஒரு கருத்தை எடுத்து வைத்தேன்.தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னிடம் பேசியதன் அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தேன்.  இந்த வழக்கில் கட்டாயம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நேரடி உதவி ஆய்வாளர் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

உண்மை இப்படி இருக்கும் போது பிரதான எதிர்க்கட்சி துணை தலைவர்,  நான் சொல்வது உண்மைக்கு மாறான செய்தி என்று கூறியதால்  பேரவை தலைவர் அதை ஆராயாமல், என் தரப்பு நியாயத்தை கேட்காமல் அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். 

எனவே  நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து நான் பேசியதை மீண்டும் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

மேலும் அவர் ,  “முதலமைச்சருக்கு தவறான தகவலை தந்ததால்,  வாயில் வரக்கூடாத வார்த்தையால் அவர் என்னை பற்றி குறிப்பிட்டார். அது எனக்கு மிகப்பெரிய மனவேதனையையும் வருத்தத்தையும் அளித்தது. அதற்கு மருந்திடுவது  போல் முதல்வர் என்னை அழைத்து,  நான் உங்களை ஒன்றும்  தவறாக பேசவில்லை என்று சொன்னார். நீங்கள் என்னிடம் வைத்த கோரிக்கையான பண்ருட்டி தொகுதிக்கு ரூ.63 கோடியில்  தடுப்பணைகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்து, நீர்வளத்துறை அமைச்சர் மூலமாக அறிவிக்க செய்திருக்கிறேன் மகிழ்ச்சியா என்று கேட்டார்.  இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். 

அப்போது அவரிடம் அமைச்சர் சேகர்பாபு  பேசியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த வேல்முருகன், “சேகர்பாபு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் என்னை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்கள். அதைபற்றி நான் கவலை கொள்ளப்போவதில்லை.  திமுக தலைமையிலான கூட்டணிக்கு முதல்வர் தான் தலைவர். அவர் எதாவது சொன்னால்  அதற்கு பதில் சொல்வேன்” என்று கூறினார்.   velmurugan speak about meeting with cm stalin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share