கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னையில் தமிழக அரசு சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் விழா கலை நிகழ்ச்சிகளோடு இன்று மாலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையேற்று நடத்தி வருகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழக அரசு பெண்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த பெண்களின் அனுபவங்கள், தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் ‘ வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் சமூக சேவகியான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 2022-ம் ஆண்டு சீனாவில் காங்சோவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய துளசிமதி முருகேசன் மற்றும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள் எம்.பி. எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த பாலன், டி. செ. ஞானவேல், நடிகை தேவயானி, சத்தியராஜ் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 2ம் கட்ட விரிவாக்கத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
