டிரான்ஸ்ஃபருக்கு இப்படி ஒரு காரணமா? வில்லங்க சர்ச்சையில் டிஐஜி… கொதிக்கும் பெண் போலீசார்!

Published On:

| By Selvam

வடக்கு மண்டலம் வேலூர் சரகத்தில் ஆண் காவலர் மற்றும் பெண் காவலர் இடமாற்றம் தொடர்பான ஆணையில், வேலூர் டிஐஜி தேவராணி குறிப்பிட்டிருக்கும் காரணம், பெண் போலீசார் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கக்கூடிய போலீஸ் பிரிவு (Court Monitaring Cell) இயங்கி வருகிறது. இந்த கண்காணிப்பு பிரிவில் ஒரு ஆண் காவலர், பெண் காவலர் உள்பட சிலர் வேலை செய்து வருகின்றனர்.

அதில் தலைமை பெண் காவலர் ஒருவர் நீண்டகாலமாக கோர்ட் விஜிலென்ஸில் பணிபுரிந்து வந்தார். அதன்பிறகு வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் க்ரைம் பிரிவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஓ.டி-யாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கக்கூடிய கோர்ட் மானிட்டரிங் பிரிவில் வேலை செய்து வந்தார்.

அதேபிரிவில், இரண்டாம் நிலை ஆண் காவலர் ஒருவர் பணி செய்து வருகிறார். அவரது மனைவியும் அதே அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில், போலீசாக பணி செய்யக்கூடிய தனது கணவரும், அதே இடத்தில் பணி செய்யக்கூடிய பெண் காவலரும் நட்பாக பழகிவந்ததாக உயர் அதிகாரிக்கு அமைச்சுப் பணியில் வேலை செய்து வரும் பெண் புகார் அளித்தாக சொல்கிறார்கள்.

அதனடிப்படையில், வேலூர் டி.ஐ.ஜி தேவராணி கடந்த 2024 டிசம்பர் 30-ஆம் தேதி இரண்டாம் நிலை காவலரை திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் காவல் நிலையத்திற்கும், தலைமை பெண் காவலரை திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்துள்ளார்.

மேலும், டிஐஜி தேவராணி, இரு காவலர்களை பணியிட மாற்றம் செய்த அதே நாள் (டிசம்பர் 30) அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேலூர் எஸ்.பி மதிவாணனுக்கு பரிந்துரை செய்தார்.

அந்த குறிப்பாணையில், சர்ச்சைக்குரிய காரணத்தை குறிப்பிடப்பட்டுள்ளார். “பெண் காவலரும் அதே இடத்தில் பணிபுரியும் ஆண் காவலரும் கடந்த ஓராண்டு காலமாக தகாத உறவுமுறையில் இருந்து வருவதாகவும், அவர்கள் இருவரும் பொது இடங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரியவருகிறது.

எனவே, மேற்கூறிய ஆளினர்கள் மீது 3 (ஆ)-ன் படி துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்” என குறிப்பிட்டிருக்கிறது.

பொதுவாக அரசுத்துறை மற்றும் பொதுத்துறைகளில் பணி செய்யக்கூடியவர்களை இடமாற்றம் செய்யும்போது நிர்வாக ரீதியாக இடமாற்றம் செய்யப்படுகிறது என்று தான் ஆணையில் குறிப்பிடுவார்கள்.

ஆனால், தகாத உறவு வைத்துக்கொண்டதாகவும் பொது இடத்தில் சுற்றித்திரிகிறார்கள் என்ற காரணத்தை குறிப்பிட மாட்டார்கள். ஆனால், வேலூர் சரக டிஐஜி இப்படி குறிப்பிட்டு இடமாற்ற ஆணை பிறப்பித்ததால் தலைமை பெண் காவலரும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஆண் காவலர் அவமானம் தாங்காமல் மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துகொண்டார். தற்போது வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் தமிழக பெண் காவலர்கள் முதல் பெண் எஸ்.பி-க்கள் வரையில் கொந்தளித்து போயிருப்பதாக சொல்கிறார்கள் போலீசார் வட்டாரத்தில்.

வணங்காமுடி

9 குடும்ப உறுப்பினர்களை இழந்த செல்ல நாய்… விமான விபத்தில் தாங்க முடியாத சோகம்!

மாஜி அமைச்சர் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : நீதிமன்றம் அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share