தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாக எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் இன்று (ஜனவரி 24) புகார் அளித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி வெளியான கேப்டன் மில்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் கதை எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் “பட்டத்து யானை” என்ற நாவலை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து பரவியது.
இதனையடுத்து வேல ராமமூர்த்தியும் கேப்டன் மில்லர் படம் தனது பட்டத்து யானை நாவலை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஊர், பெயர், கதையின் காலகட்டம் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்து எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் தனது பட்டத்து யானை நாவலை கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பதிவு செய்ததாகவும் கதை திருட்டு குறித்து எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளிக்க போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் வேல ராமமூர்த்தி கதை திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று புகார் அளித்துள்ளார். அதில், தனது பட்டத்து யானை நாவலை திருடி தயாரிப்பாளர்கள் படம் எடுத்துள்ளார்கள் என்றும், இது குறித்து தன்னிடம் முன்கூட்டியே அனுமதி கேட்கவில்லை என்றும் பட்டத்து யானை நாவலுடன் சென்று வேல ராமமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
இந்த கதை திருட்டு விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கோலிக்கு பதிலாக படிதார் அணியில் சேர்க்கப்பட்டது ஏன்? : ரோகித் விளக்கம்!
மம்தாவை தொடர்ந்து கெஜ்ரிவால் அறிவிப்பு: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு!
