கிச்சன் கீர்த்தனா: சண்டே ஷாப்பிங்… இந்த காய்கறிகளை வாங்க மறந்துடாதீங்க!

Published On:

| By Minnambalam Desk

வெள்ளரிக்காயும் வெண்பூசணியும் வெயிலுக்கேற்ற காய்கறிகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவை தவிர கோடைக்காலத்தில் நீங்கள் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய நீர்ச்சத்து நிறைந்த முக்கியமான காய்கறிகளைப் பற்றி விளக்குகிறார்கள் டயட்டீஷியன்ஸ். அந்த வகையில் இந்த காய்கறிகள் எல்லாம் இன்று சண்டே ஷாப்பிங் செல்லும் உங்கள் லிஸ்ட்டில் இருக்கட்டும்! Vegetables to eat in summer

தக்காளி: வைட்டமின் சி, கே 1, பி 9 சத்துகள் தக்காளியில் நிறைந்திருப்பதால், அது ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. 95 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்தது. நார்ச்சத்து அதிகமிருப்பதால், தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு மற்றும் அது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

பாகற்காய்: கோடையில் சருமத்தில் கொப்புளங்கள், தடிப்பு, படர்தாமரை போன்றவை ஏற்படும். பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை மிக எளிதாகத் தவிர்க்கலாம். பாகற்காய் சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கத்திரிக்காய்: இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருப்பதால், கத்திரிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படும். நோய்த்தொற்றுகளைத் தடுக்கும். மலச்சிக்கல் மற்றும் செரிமானப் பிரச்சினைகளைச் சரிசெய்ய உதவும்.

புடலங்காய்: கோடையில் ஏற்படும் சுவாசக்குழாய் தொடர்பான தொற்றுகளைத் தவிர்க்க புடலங்காய் உதவும். அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சினைகளையும் புடலங்காய் சரிசெய்யும். உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதோடு, சருமப் பராமரிப்புக்கும் உதவும்.

பீன்ஸ்: பீன்ஸில் வைட்டமின் மற்றும் ஃபோலேட் சத்துகள் நிறைந்திருப்பதால், மனநலத்தைக் காக்கும். இதிலுள்ள அமினோ அமிலம், சுரப்பிகளின் செயல்பாடுகளைச் சீராக்கும். மிகக் குறைந்த அளவே கலோரி இருக்கும் என்பதால், பகல் நேரத்தில் உடல் சோர்வு ஏற்படாமல் காக்கும். Vegetables to eat in summer

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share