வீரபாண்டியாரின் வளர்ப்பு… ஸ்டாலின் தோழன்… இப்போது அமைச்சர்- யார் இந்த வக்கீல் ராஜேந்திரன்?

Published On:

| By Aara

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமைச்சரவையில் சேலம் மாவட்டத்துக்கு பிரதிநித்துவம் கிடைத்துள்ளது. இம்மாவட்டத்தில் திமுக சார்பில் வெற்றிபெற்ற ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான பனமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் முதல் முறையாக நேற்று செப்டம்பர் 29 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம்  மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், சேலத்தை மையமாகக் கொண்டே எடப்பாடி செயல்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 எம்.எல்.ஏ. தொகுதிகளில் 8 இல் அதிமுக, 2 இல் அதன் கூட்டணியான பாமக என 10 தொகுதிகளில் அதிமுக கூட்டணியே கைப்பற்றியது.

ஒரே ஒரு தொகுதியில் அதாவது சேலம் வடக்கு தொகுதியில் மட்டும் சேலம் மத்திய மாவட்டச் செயலாளரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் வெற்றி பெற்றார். திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கான அமைச்சராக ராஜேந்திரன் இருப்பார் என்று 2021-லேயே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அப்போது சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கவில்லை. இப்போது 2024 இல் அவர் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்.

யார் இந்த ராஜேந்திரன்?

சேலம் அஸ்தம்பட்டியில் பிறந்த ராஜேந்திரன் 1980-ல் பள்ளிப் பருவத்தில் இருந்தே திமுக மாணவர் அணியில் உறுப்பினரானவர்.  சேலத்தில் பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரிப் படிப்பை சென்னை குருநானக் கல்லூரியில் தொடர்ந்தார்.  1982-83 இல்  மாணவர் பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராஜேந்திரன். பின் வழக்கறிஞராகவும் தேர்ச்சி பெற்றார்.  மாணவ பருவத்தில் இருந்தே திமுகவுக்காக களப் பணியிலும் கருத்துப் பணியிலும் ஈடுபட்டார் ராஜேந்திரன்.

ராஜேந்திரனின் திறமையைப் பார்த்து மெச்சிய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் அவரை சேலத்தில் கட்சிப் பணியாற்றச் சொல்லி ஊக்கப்படுத்தினார்.  1985 முதல் 92வரை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர், 1992 முதல் 1999  வரை சேலம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், 99 முதல் 2015 வரை  திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ,  2001 இல் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், 2004 முதல் தொமுச போக்குவரத்து தலைவர் என பல்வேறு கட்சிப் பணிகளை வகித்தார் ராஜேந்திரன்.

’வக்கீல்’ என்றுதான் ராஜேந்திரனை அழைப்பார் வீரபாண்டி ஆறுமுகம். வக்கீல் வந்துட்டாரா? வக்கீல் சொல்லிட்டாரா? வக்கீல்கிட்ட கேட்டுக்க என்று ராஜேந்திரனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவரை வளர்த்தெடுத்தார் வீரபாண்டி ஆறுமுகம்.

இன்றைக்கும் கூட சேலத்தின் சீனியர் திமுகவினர், ‘வீரபாண்டியாரின் வளர்ப்பு மகனாகவே இருந்தார் ராஜேந்திரன். வீரபாண்டியாரின் மனசாட்சியாகவும் இருந்தார். மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கான தீர்மானங்கள், கட்சியின் அறிக்கைகள் தயாரிக்கும் பொறுப்பை ராஜேந்திரனிடமே ஒப்படைப்பார் வீரபாண்டியார்’ என்கிறார்கள்.

இந்த நிலையில்தான் 2006 ஆம் ஆண்டு பனமரத்துப்பட்டி  சட்டமன்றத் தொகுதியில்  ராஜேந்திரனை வேட்பாளராக நிறுத்துகிறார் வீரபாண்டியார். அதில் ராஜேந்திரன் வெற்றி பெறுகிறார்.

இந்த நிலையில் ராஜேந்திரனைப் பற்றி வீரபாண்டியாரிடமும்… வீரபாண்டியார் பற்றி ராஜேந்திரனிடமும் சிலர் தவறான தகவல்களை பரிமாற்றம் செய்ய இருவருக்குமான இடைவெளி தொடங்கியது. அதன் பின் பல காரணங்களால் அது வளர்ந்தது.

இதே நேரத்தில் மாநிலம் முழுதும் தனக்கான ஆதரவாளர்களை ஒருங்கிணைத்தார் அப்போதைய இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து அரசியல் செய்துகொண்டிருந்த ராஜேந்திரனை தனது உற்ற தோழர் ஆக்கினார் ஸ்டாலின்.

சேலம் மாவட்டத்தில் இளைஞரணி போஸ்டர்களில் கூட ஸ்டாலின் படம் இருக்கக் கூடாது என்பது வீரபாண்டியாரின் அறிவிக்கப்படாத கட்டளையாக இருந்தது. முதன் முதலில் ஸ்டாலின் படத்தைப் போட்டு போஸ்டர்களை ஒட்டினார் ராஜேந்திரன். இப்படியாக வீரபாண்டியாருக்கு எதிரான அரசியலை, அவர் காலத்திலேயே தொடங்கினார் ராஜேந்திரன்.

இதற்கிடையில் 2012 இல் வீரபாண்டி ஆறுமுகம் காலமான நிலையில், சேலம் மாவட்ட திமுகவில் உட்கட்சிப் பூசல்கள் அதிகமாயின. எந்த அளவுக்கு என்றால் ராஜேந்திரன் தனது உயிருக்கு ஆபத்து என்று நீதிமன்றம் சென்று கன்மேன் பாதுகாப்பு பெறும் அளவுக்கு கட்சியின் நிலை இருந்தது.

2016 இல்  சேலம் வடக்கு தொகுதியில் வெற்றி, 2021 இல் மீண்டும் வெற்றி என தொடர் வெற்றிகளை பெற்றார் ராஜேந்திரன். உட்கட்சித் தேர்தலில் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

2021 இல் சேலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுக சார்பில் ராஜேந்திரன் வெற்றிபெற்றார். அப்போதே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும். எனினும் இப்போதாவது கொடுத்திருக்கிறார்களே… இதன்மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகளை திமுக பெற வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சேலம் திமுக நிர்வாகிகள்,

அமைச்சரான பின் முதன் முதலாக, வரும் புதன் கிழமை சேலம் திரும்புகிறார் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன். அப்போது தன்னை அரசியலில் வளர்த்தெடுத்த வீரபாண்டியாரின் நினைவிடம் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு சேலம் திமுகவில் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

காந்திக்கு பதிலாக அனுபம் கெர்… அப்படியும் ஏமாந்த தங்க வியாபாரி!

“ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை கெளரவிக்காதது வருத்தம்” – பி.டி.உஷா

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share