கேரள மாநில முதல்வராக வி.டி. சதீசன் (மே 18) இன்று பதவியேற்றுக் கொண்டார்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்த நிலையில் 102 இடங்களுடன் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் மட்டும் 63 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் (எல்டிஎஃப்) 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. இடது சாரி கூட்டணி கட்சிகள் 35 இடங்களை கைப்பற்றிய நிலையில் 3 இடங்களில் பாஜக வென்றது.
தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முந்தைய பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன், கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகிய மூவா் இடையே முதல்வா் பதவிக்கு கடும் போட்டி எழுந்தது. இதனால் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவியது
நீண்ட இழுபறிக்கு பின்னர் வி.டி.சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடந்த 14ம் தேதி காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இதுகுறித்து பிரியங்கா காந்தி போட்ட ‘ஸ்கெட்ச்’! முதல்வர் கனவில் கண்டெய்னர் மண்ணைக் கொட்டிய ராகுல் காந்தி- குமுறும் கேசி வேணுகோபால்.. கேரளாவில் நடந்தது என்ன? என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று வி.டி.சதீசன் கேரள மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத ஆர்லேகர் சதீசனுக்கு பதவிப்பிரமாணமும் ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மேலும் முதல்வருடன் ரமேஷ் சென்னிதலா, குஞ்ஞாலி குட்டி உள்ளிட்ட 20 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.









