கட்டுக்கட்டாக கள்ளநோட்டு… சிக்கிய விசிக பொருளாளர்… அதிர வைக்கும் பின்னணி!

Published On:

| By vanangamudi

கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Vck treasurer caught Counterfeit

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வம். இவர் கடலூர் மேற்கு மாவட்ட விசிக பொருளாளராக செயல்பட்டு வருகிறார்.

இவர் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

இதுதொடர்பாக கடலூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்,

“கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்ணிடம் அதே ஊரைச் சேர்ந்த சங்கர் மற்றும் விசிக பொருளாளர் செல்வம் ஆகிய இருவரும் நட்பாக பழகியுள்ளனர். யார் சத்யாவிடம் பழகுவது என்ற அடிப்படையில் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சங்கர் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது அம்மாவையும் செல்வம் தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து ராமநத்தம் காவல்நிலையத்தில் சங்கரின் அம்மா அளித்த புகாரின் அடிப்படையில், செல்வம் மீது அடிதடி, பெண் வன்கொடுமை சட்டத்தில் குற்ற எண் 57/ 25-கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் செல்வத்தை கைது செய்வதற்காக ராமநத்தம் எஸ்.ஐ ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸார், இன்று (மார்ச் 31) காலை 6.30 மணிக்கு அதர்நத்தம் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வயல்வெளி மத்தியில் உள்ள செல்வத்தின் பண்ணை வீட்டில் இருந்த இரண்டு பேர், போலீசாரை கண்டதும் ஓடியுள்ளனர்.

அவர்களைப் பார்த்து போலீசார் வேகமாக அந்த பண்ணை வீட்டுக்குள் சென்றனர். அங்கே ஒரு செட் போலீஸ் யூனிஃபார்ம் , நான்கு வாக்கி டாக்கி, 2 கைத்துப்பாக்கி, ஆர்பிஐ சீல், பணம்.கட்டும் டேப், கலர் ஜெராக்ஸ் மெஷின், 83 ஆயிரம் கள்ள நோட்டுக்கள் ஆகியவை இருந்ததை பார்த்து ஷாக்காகினர்.

உடனடியாக கடலூர் எஸ்.பி ஜெயக்குமார் கவனத்திற்கு இந்த விவகாரம் எடுத்துச்செல்லப்பட்டதும்,. பணம் உள்பட அனைத்து உபகரணங்களையும் வீடியோ எடுத்து உடனடியாக கைப்பற்றுமாறு உத்தரவிட்டார் எஸ்.பி.

தப்பியோடியவர்களை பிடிக்க ஸ்பெஷல் டீம் அமைக்கப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில், விசிக மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்துக்கு சொந்தமான அந்த 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீட்டில் ஒரு இன்னோவா கார், ஒரு பார்ச்சுனர் கார், இரண்டு டிப்பர் லாரி, ஒரு ஜேசிபி, ஒரு டிராக்டர், ஒரு R15 பைக் இருந்திருக்கிறது. பணத்தை வேறு எங்கேயோ வைத்து பிரிண்ட் செய்து தனது பண்ணை வீட்டில் வைத்து சப்ளை செய்திருக்கிறார் செல்வம்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்வம் கள்ளநோட்டு அச்சடித்து வந்திருக்கிறார் என்று இப்போது தெரியவந்துள்ளது. இதனால், செல்வத்திடம் தொடர்புடையவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கத்திலும் செல்வம் ஒரு கம்பெனி நடத்தி வருவது தெரியவந்துள்ளது.

போலீஸ் யூனிஃபார்ம், வாக்கி டாக்கி, துப்பாக்கி இருப்பதையெல்லாம் பார்க்கும்போது, வழிப்பறி அல்லது ஹவாலா பணம் கடத்துபவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

ஆரம்பத்தில் செல்வம் எளிமையாக இருந்தவர் தான். ஆனால், அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது தான் அந்த பின்னணி தெரியவந்திருக்கிறது” என்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக விசிகவினர் மத்தியில் விசாரித்தோம்…

“விசிக தலைவர் திருமாவளவனின் உதவியாளரான திண்டிவனம் ராஜேந்திரன் செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவர். கள்ளக்குறிச்சி மது ஒழிப்பு மாநாடு சமயத்தில் திருமாவளவன் மிகவும் பிஸியாக இருந்தபோது, திருமா கையெழுத்திட்ட லெட்டர் பேடில் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செல்வத்தை நியமித்துள்ளார் ராஜேந்திரன்.

மாநாடு முடிந்தபிறகு, ‘அண்ணே, செல்வம் கட்சிக்கு ரொம்ப விசுவாசமா உழைக்கக்கூடியவர். நல்ல செலவு செய்வார். அதனால் மாவட்ட பொருளாளராக நியமித்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். திருமாவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது செல்வத்தின் உண்மை முகம் தெரிந்ததும் திருமா அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளார்” என்கிறார்கள். Vck treasurer caught Counterfeit

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share