இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) நடவடிக்கையை தமிழ்நாட்டில் நிறுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாளவன் எம்.பி. வழக்கு தொடர்ந்துள்ளார். திருமாவளவனுக்காக சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் திஷா வடேகர், இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. SIR எனப்படும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் பணிச்சுமையால் BLO பணியாளர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையை நிறுத்த கோரி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது; அதேபோல கேரளா மாநில அரசும் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யும் உச்சநீதிமன்றத்தில் SIR-க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கறிஞர் திஷா வடேகர்
திருமாவளவனுக்காக சமூக செயற்பட்டாளரும் சமூக நீதி, பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவருமான வழக்கறிஞர் திஷா வடேகர் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
- திஷா வடேகர், அம்பேத்கரிய பெண்ணிய உரிமைக்காக, அனைத்துவிதமான பாகுபாடுகளுக்கும் எதிராகவும் குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்.
- முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் (EWS) 10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதிட்டவர் திஷா வடேகர். EWS இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது; அரசியல் சாசனத்தின் இடஒதுக்கீடு கோட்பாட்டுக்கு எதிரானது என ஆணித்தரமாக வாதிட்டவர்.
- சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கிலும் பணியாற்றினார். அந்த வழக்கில் பாலின சமத்துவம் குறித்த தமது வாதங்களை முன்வைத்தார் திஷா வடேகர்.
- உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான வழக்குகளில் பங்களிப்பு செய்தவர் திஷா வடேகர்.
- அதேபோல சிறைச்சாலைகளில் ஜாதிய பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக பத்திரிகையாளர் சுகன்யா சாந்தாவுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் திஷா வடேகர்.
- 2022-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில அரசின் உதவி சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.
–
