சனாதனத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையிலான ஒரு யுத்தமே வரும் தேர்தல் – திருமாவளவன்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் சமத்துவத்திற்கும் சனாதனத்திற்கும் இடையேதான் வரும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் சமத்துவத்திற்கான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 2) கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், “வைகோவை எண்பதுகளின் துவக்கத்தில் எனது மாணவ பருவத்திலேயே கண்டு வியந்தவன் நான். அவர் எங்கே உரையாற்றினாலும் அங்கே சென்று அவரது உரைகளை கேட்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் போர்ப்படை தளபதியாக களத்தில் அன்றைக்கு அவரிடம் கண்ட அதே வேகம் அதே வீரியம், பல பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் இன்றும் நீடிப்பது வியப்பைத் தருகிறது. அது மட்டும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட கொள்கையில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா விதைத்த சமத்துவக் கொள்கையில் இன்னும் உறுதிப்பாட்டோடு விளங்குகிறார் என்பதற்கு சான்றாக இந்த சமத்துவ நடைபயணம் விளங்குகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் 1986 இல் இருந்து 2018 வரையில் பத்து முறை தொடர் நடைபயணங்கள் மூலம் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டவர். இந்த 11 வது நடைபயணம் தம்முடைய கொள்கை இலக்கை எடுத்துரைக்கக் கூடிய ஒரு நடைபயணமாகவும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரிக்க வேண்டிய ஒரு நடை பயணமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி.

சமத்துவ அரசியல்

சமத்துவத்திற்காக போராடக் கூடிய நாம் அனைவரும் அவரோடு இந்த நடை பயணத்தில் இணைந்தே நடக்க வேண்டும்.

ADVERTISEMENT

பெரியார் இயக்கம் கண்டதும்,பேரறிஞர் அண்ணா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்ததும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரை நூற்றாண்டு காலம் இந்த மண்ணில் அரசியல் செய்ததும் சமத்துவத்திற்காகத்தான். அவருடைய கருத்தியல் வாரிசாக இன்று களத்தில் நின்று திராவிட மாடல் என்ற சமத்துவ அரசியல் நடத்தி நமது முதல்வரும் போராடிக் கொண்டிருப்பது சமத்துவத்திற்காகத்தான்.

இங்கு கூடியிருக்கும் நம் அனைவரின் இறுதி இலக்கும் சமத்துவம்தான்.

ADVERTISEMENT

நம்மை எல்லாம் மனிதர்களாய் தலைநிமிர வைத்த புரட்சியாளர் அம்பேத்கரும், பெரியாரும் இந்த மண்ணில் தம் இறுதி மூச்சு உள்ள வரையில் உரத்துப் பேசியதும், ஓடி பணியாற்றியதும் தம் வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதும் சமத்துவத்திற்காகத்தான். நமது கூட்டணி சமத்துவத்திற்கான கூட்டணி.

ஆனால் நம்முடைய சமத்துவத்திற்கு எதிராக களத்தில் நிற்பவர்கள் சனாதன சக்திகள். பாகுபாடுகள் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்பக் கூடியவர்கள். பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு நீடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவர்கள். ஒரு புறம் சனாதன சக்திகள். மற்றொருபுறம் ஜனநாயக சக்திகள். இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு கூட்டணி அரசியலை மு.க. ஸ்டாலின் இன்று முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

தேர்தல் யுத்தம்

மதச்சார்பின்மை சகோதரத்துவம் சமத்துவம் என்பதுதான் இன்றைக்கு இந்தியா முழுவதும் நாம் பேசுகின்ற அரசியல்.

2026 இல் நடைபெற உள்ள தேர்தல் சனாதனத்திற்கும், சமத்துவத்திற்கும் இடையிலான ஒரு யுத்தம் தான். வரும் ஏப்ரல் மே மாதம் நாம் சந்திக்கப் போவது யுத்தம். இது வழக்கமான தேர்தல் இல்லை. சராசரியான தேர்தல் இல்லை. தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கிற சனாதன சக்திகள் ஒருபுறம்.

மற்றொருபுறம் பெரியாரின் பிள்ளைகள், அண்ணாவின் தம்பிகள், அம்பேத்கரின் அரசியல் வாரிசுகள் தமிழ் மண்ணை சனாதன சக்திகள் ஆக்கிரமிப்பதற்கு ஒரு போதும் விடமாட்டோம் என்கின்ற உறுதிப்பாட்டோடு தான் நாம் ஸ்டாலின் தலைமையில் அணி திரண்டு இருக்கிறோம்.

வெளிப்படையாக சனாதன சக்திகள் ஒரு புறம் நிற்கிறார்கள் என்றால் அவர்களுக்கு துணையாக பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டு திராவிடத்தை பேசக்கூடியவர், தமிழ் தேசியத்தை பேசக்கூடியவர்கள் என சிலர் திரிபுவாத அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் ஒரே களத்தில் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மிடத்தில் உள்ளது. அவர்களை வீழ்த்துவதற்கான வலிமை மு.க.ஸ்டாலினின் தலைமையில் அடங்கி உள்ளது என்பதால்தான் நாம் கைகோர்த்து நிற்கிறோம்.

இந்தி திணிப்புக்கு எதிரானது திராவிடம்

இன்று நாம் தமிழ் என்று பேசுகிறோம் என்றால் அது திராவிடத்தால் தான். திராவிடம் என்பது தமிழ் தேசியத்திற்கோ, தமிழுக்கோ, தமிழனுக்கோ, தமிழ் மண்ணிற்கோ எதிரானது அல்ல.

இந்தி திணிப்பு என்பதை தடுத்தது திராவிடம். இந்தி திணிப்பை தடுத்ததால் தான் தமிழ் இங்கே உயிர்ப்போடு வாழ்கிறது. இந்தி திணிப்பை எதிர்த்த போராளி தந்தை பெரியாரால் தான் தமிழ் இன்றைக்கு உயிர்ப்போடு இருக்கிறது. அதனால் தமிழ் என்றும் தமிழ் தேசியம் என்றும் நம்மால் பேச முடிகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போராடாமல் இருந்திருந்தால் திராவிடம் இந்தியை தடுக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் எல்லோரும் இந்தியை பேசக்கூடிய இந்தி வாலாக்களாக மாறி இருப்போம்.

தமிழ் தேசியம் என்ற சொல்லே பிறந்து இருக்காது 40,50 ஆண்டுகளில் தமிழ்நாடு இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றாக மாறி இருக்கும்.

இன்று தமிழ்நாட்டில் தமிழ் வாழ்கிறது என்றால் தமிழ் உணர்வு மேலோங்கி இருக்கிறது என்றால் தமிழ் தேசியம் என்ற சிந்தனை வளர்ந்தோங்குகிறது என்று சொன்னால் அதற்கு அடித்தளம் வகுத்த தலைவர் தந்தை பெரியார். அதை பரப்பியவர் பேரறிஞர் அண்ணா. அதை கட்டிக் காத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அதை இன்று முன்னெடுத்துச் செல்பவர் மு.க. ஸ்டாலின். ஆகவே சமூக நீதி சகோதரத்துவம், சமத்துவம் என்பதுதான் திராவிடம் எனவே இந்தப் பயணம் திராவிட நடைபயணம் என்று சொன்னாலும் பொருந்தும். சமத்துவ நடை பயணம் என்று சொன்னாலும் பொருந்தும். என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share