”விசிக மாநாட்டுக்கு பாமகவின் ஆதரவு உண்டு, ஆனால்..” : திருமாவை எச்சரித்த அன்புமணி

Published On:

| By christopher

vck conference has pmk support, but.." : Anbumani warned Thirumavalavan

”மது ஒழிப்பிற்கு எதிராக யார் மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். அதன் அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 15) செய்தியாளர்களை சந்தித்தார்.

விசிக என்ன கட்சியாம்?

அப்போது அவரிடம்,  ’பா.ம.க-வை ஜாதி கட்சி என திருமாவளவன் கூறியுள்ளாரே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அன்புமணி, “விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்?” என திருப்பி கேள்வி எழுப்பினார்.

இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

தொடர்ந்து அவர் “பா.ம.க சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள் என மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பாமக.

நீங்கள் (விசிக) மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். இந்தியாவில் எந்த கட்சி, மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை.

சுற்றுச்சூழலுக்காகவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க. இப்படி எத்தனையோ சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். வி.சி.க-வை பற்றி தரக்குறைவாக எங்களாலும் பேச முடியும்” என்று தெரிவித்தார்.

மது ஒழிப்பில் திருமாவளவன் எல்.கே.ஜி!

மேலும் அவர், “மது ஒழிப்பில் பா.ம.க பிஎச்டி படித்துள்ளது, திருமாவளவன் தற்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார். திருமாவளவன் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால், எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர்.

மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பா.ம.க-வை சேர்ந்த 15000 பெண்கள் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். பா.ம.க தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும், இந்திய அளவில் 90,000 மது கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பாமக தான் முயற்சி மேற்கொண்டது.

அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்குதான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.

கனிமொழியை அழையுங்கள்!

திருமாவளவனுக்கு மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு தேர்தலில் ஏன் வாக்கு கேட்டீர்கள்? இந்த இரண்டு தி.மு.க எம்.பி-களும் தமிழக அரசின் மதுக்கடைகளுக்கு 40 சதவிகிதம் மது சப்ளை செய்கிறார்கள்.

திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்காக பேசுகிறார். மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கும் அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” : கெஜ்ரிவால் முடிவு!

ஷாருக்கானை மிஞ்சிய விஜய்… ‘தளபதி 69’க்கு இவ்வளவு கோடி சம்பளமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share