நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 27) மறுத்த நிலையில், இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 28) மேல்முறையீடு செய்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுகிறது. இந்தநிலையில், விசிகவுக்கு பானை சின்னம் கேட்டு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.
ஆனால், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கவில்லை. இந்தநிலையில், விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மாலை 5 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
”விசிக கடந்த இரண்டு பொதுத்தேர்தல்களில் குறைந்தபட்சம் ஒரு சதவிகித வாக்குகளை கூட பெறவில்லை, அதனால் பானை சின்னத்தை ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மனுவில், “2016 சட்டமன்ற தேர்தலில் 0.77 %, 2019 நாடாளுமன்ற தேர்தலில் 1.18 % வாக்குகளை விசிக பெற்றுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் விசிகவின் வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக பதிவேற்றவில்லை. தேர்தல் ஆணைய சின்னத்திற்கான விதிமுறைகளை பூர்த்தி செய்தும் எங்களுக்கு சின்னம் ஒதுக்கவில்லை. எனவே, பானை சின்னத்தை விசிகவிற்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று மதியம் 2.15 மணிக்கு நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…