திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளரை கொன்றவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த மூர்த்தி அவரது மகன்கள் தங்கப்பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் தந்தை மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கத்தியால் தாக்கி கொண்டனர்.
இந்த தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு சென்ற குடிமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக வேலை மூன்று பேரும் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது இரண்டு மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) காலை விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு மூர்த்தியின் மகனான மணிகண்டனை போலீசார் அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரை தாக்கி அவர் தப்பிக்க முயன்றதால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் கைதான தந்தை மூர்த்தி மற்றும் மற்றொரு மகனான தங்கப்பாண்டிக்கு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
என்கவுண்ட்டர் செய்யப்பட்ட மணிகண்டன் மீது, திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலையத்தில் (குற்ற எண் :399/2016) (ஐபிசி 147, 148, 294, 307, 324, 342) கொலை முயற்சி, கூட்டாக சேர்ந்து கொடும் காயம் ஏற்படுத்துதல்,
அதே காவல்நிலையத்தில் (குற்ற எண் 108/2015 (ஐபிசி 387) – அடித்து வழிப்பறி செய்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
வடமதுரை காவல் நிலையத்தில் குற்ற எண் :94/2017, ஐபிசி – 379 ) திருட்டு வழக்கு,
தேனி மாவட்டம் , தேவனாதப்பட்டி காவல் நிலையத்தில், (குற்ற எண் – 582/2017) (ஐபிசி 294(பி), 324, 509, 506(2)) பொது இடங்களில் ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இதுபோன்று மற்றொரு நபரான தங்கப்பாண்டியன் மீது, எரியோடு (குற்ற எண் : 403/2017) , வேடசந்தூர் (குற்ற எண்.386/2016), வடமதுரை (குற்ற எண் – 94/2017) உள்ளிட்ட காவல் நிலையங்களில், வழிபறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
