அறிமுக இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி வெர்டிக்ட்’. இப்படத்தில் சுஹாசினி, வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Varalakshmi furious on the Pollachi case verdict
முழுவதுமாக அமெரிக்காவில் தயாராகியுள்ள இப்படம், வரும் மே 30ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் வரலட்சுமி பேசுகையில், “முதலில் என்னை ஹாலிவுட் திரை உலகத்திற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. நான் இது போன்ற ஆங்கிலத்தில் எந்தப்படத்திலும் பேசியதில்லை. நான் ஆங்கிலம் பேசினால் வேகமாக இருக்கும், யாருக்கும் புரியாது. என்னை இதில் மிதமான வேகத்தில் பேச வைத்தார்கள். நீதிமன்றத்தில் வழக்காடும் காட்சியில் நடித்தது சவாலாக இருந்தது. ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு போட்டியாக நான் நடித்தது பெருமையாக இருந்தது” என்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் வரலட்சுமியிடம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛‛சாதாரண ஒரு குற்றத்துக்கே கை, கால் எடுக்கிறார்கள். பாலியல் தொடர்பான குற்றங்கள் செய்பவர்களின் அந்த உறுப்பை அறுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் உயிருடன் வாழ வேண்டும். அப்போது தான் அந்த தண்டனையை அவர்களால் உணர முடியும்” என ஆவேசமாக பதிலளித்துச் சென்றார்.
முன்னதாக கடந்த மாதம் அவர் நடுவராக பங்கேற்று வரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானநிகழ்ச்சி தனக்கு சிறுவயதில் நேர்ந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்திருந்தார்.
அப்போது அவர், “என்னுடைய சிறுவயதில் அப்பா – அம்மா இருவரும் என்னை மற்றவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று விடுவார்கள். அந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு 5-6 நபர்களால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்’ என்று கண்கலங்கியபடி கூறியிருந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது குறிப்பிடத்தக்கது
