வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு : அன்புமணி – ராமதாஸ் ஆதரவாளர்களிடையே மோதல் – திண்டிவனத்தில் பதற்றம்!

Published On:

| By Kavi

திண்டிவனத்தில் ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு உண்டானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவராக அங்கீகரித்துள்ள ராமதாஸின் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு முடியுறாமல் நீடித்து வருகிறது. இந்தநிலையில் கட்சியை விட்டே அன்புமணி நீக்கப்படுகிறார் என்று ராமதாஸ் நேற்று (செப்டம்பர் 11) அறிவித்தார்.

ADVERTISEMENT

இதுபோன்ற சூழலில் தான் இன்று (செப்டம்பர் 12) திண்டிவனத்தில் இரு அணியினருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மயிலம் சாலையில் வன்னியர் சங்க தலைமை அலுவலகம் உள்ளது.

ADVERTISEMENT

இந்த அலுவலகத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 17 ஆம் தேதி வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்படுவது வழக்கம்.

கடந்த காலங்களில் ராமதாஸ், அன்புமணி இருவருமே 21 தியாகிகளின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்துவார்கள்.

ADVERTISEMENT

அந்தவகையில் இந்த ஆண்டும் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக வன்னியர் சங்க அலுவலகத்தை தயார் செய்யவதற்காக அன்புமணி தரப்பு மாவட்ட செயலாளரான மொ.ப.சங்கர் போலீசாரிடம் நேற்று மனு கொடுத்தார்.

இதையறித்த ராமதாஸ் தரப்பு விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வந்து பூட்டு போட்டு பூட்டிவிட்டார்.

இதனால் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களுக்கும், ராமதாஸ் தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த திண்டிவனம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் திண்டிவனத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் மோதலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்தசூழலில் அலுவலகம் இயங்கி வரும் கட்டடத்தின் உரிமையாளரான செந்தில், அன்புமணி தரப்பினர் அதனை பயன்படுத்திக் கொள்ள எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share