வன்னியர் சங்கம் சார்பில் மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. vanniyar sangam conclave asra garg
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் மாநாட்டுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு நடைபெறும் இடத்தில் ஒரு லட்சம் நாற்காலிகள் போட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், “சித்ரா பௌர்ணமி நாளில் பாமக மாநாடு நடத்துவதால் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நேற்று (மே 8) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநாடும் சித்ரா பௌர்ணமி விழாவும் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்குக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், வன்னியர் சங்கம் மாநாட்டில் கலவரம் எதுவும் நடக்காமல், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அஸ்ரா கார்க் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி,
“மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்ட உட்கோட்டங்களில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் வாகன பாஸ் வாங்க வேண்டும். இதற்காக, டிரைவரின் போட்டோ, லைசென்ஸ், ஆர்.சி புக், இன்சுரன்ஸ் உள்ளிட்ட விவரங்களை டிஎஸ்பி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இதனை முறையாக ஆய்வு செய்து டிஎஸ்பி அலுவலகத்தில் வாகன பாஸ் வழங்கப்படும். பஸ், வேன், கார்களின் மேற்கூரையில் ஏறக்கூடாது, மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தில் பயணம் செய்யக்கூடாது. பாண்டிச்சேரி வழியாக ஈசிஆர் செல்லக்கூடாது” என நிபந்தனைகளை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் மின்னம்பலம் சார்பாக விசாரித்தபோது, “வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கின் இந்த நிபந்தனைகளுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பாமக நிர்வாகிகள், ஒருகட்டத்தில் சம்மதம் தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், நேற்றிலிருந்து வாகன பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. வடக்கு மண்டலத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் மொத்தமாக 5,000 பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற கடும் நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும், கலவரம் நடக்காமல் தடுக்க முடியும். மேலும், மாநாட்டுக்கு எத்தனை வாகனங்கள், எத்தனை பேர் வருகிறார்கள் என கணக்கெடுக்க முடியும்” என்கிறார்கள். vanniyar sangam conclave asra garg
