கலைஞருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வன்னியர்கள் சத்யவானாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு முழு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் மற்றும் 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 28) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் கலந்துகொண்டு ஏ.கோவிந்தசாமியை புகழ்ந்து பேசினார்.
“ஒருமுறை கடலூரில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு வி.கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சாப்பிட சென்றோம். அப்போது ஏ.கோவிந்தசாமி என்னை அழைத்து தனியாக பேசினார். எனக்கு தெரிந்தவரை கலைஞர் உன் மீது அதிகம் அன்பு வைத்திருக்கிறார் என்று சொன்னார். கலைஞர் மீது யார் அதிகம் அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை கடைசி வரை காப்பாற்றுவார் என்று கூறினார்.
எனவே எந்த சலனத்துக்கும் ஆட்படாமல் கடைசி வரை அந்த தலைவருக்கும் குடும்பத்துக்கும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்தார். அதுவொரு பாடமாக எனக்கு அமைந்துவிட்டது.
ஏஜி சமுதாயத்தை வைத்து பிழைக்கத் தெரியாதவர். ஏழையாக பிறந்து, ஏழையாகவே மறைந்தார். எனக்கு பின்னால் நீங்கள் தான் என் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஏஜி கலைஞரிடம் சொன்னார். அதை காப்பாற்றினார் கலைஞர்” என்று கூறினார்.
டிஜிபியாக வன்னியரை கொண்டு வந்து உட்காரவைத்தார். அமைச்சரவையில் வன்னியரை கொண்டு வந்து உட்காரவைத்தார் கலைஞர் என்று குறிப்பிட்ட துரைமுருகன், “கலைஞர் வழியில் தப்பாமல் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வன்னியர் சமுதாயத்திற்கு தலைவர் கலைஞரை விட ஒரு படி மேலே சென்று, 2 கோடி பேர் தொண்டர்கள் இருக்கிற பேரியக்கமான திமுகவிற்கு பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். இதுஒன்றே போதும் இந்த சமுதாயத்திற்கு.
நீங்களும், உங்கள் தந்தையும் ஆற்றிய தொண்டுக்கு இந்த சமுதாயம் என்றைக்கும் சத்யவானாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் மனிதனாகவே இருக்க முடியாது. இதைவிட வேறு எவரும் செய்துவிட முடியாது” என்று கூறினார்.